பெரம்பூர் தொகுதியில் 3வது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.டி.சேகர் வெற்றி பெறுவார்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

 

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலை கொடுங்கையூர் எம்.ஆர் நகர் பகுதியில் திமுக தேர்தல் பணிமனையை அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு பணிமனையை திறந்துவைத்து பேசியதாவது; பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார். அவருக்கு திமுக உட்பட தோழமைக் கட்சிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 2 முறை தேர்தல் பணிமனைகளை நான் திறந்து வைத்துள்ளேன். தற்போது மூன்றாவது முறையாக ஆர்.டி.சேகருக்கு பணிமனையை திறக்க வந்துள்ளேன். இந்த முறையும் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார். ஆர்.டி.சேகரின் வெற்றிக்காக அனைவரும் களத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனை நாம் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் கடைசியாக நடைபெற்ற இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.டி.சேகர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த முறையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க திமுக, அதன் தோழமை கட்சிகள் பணியாற்ற வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை திட்டங்களையும் திமுக செய்துள்ளது. அதனை பொதுமக்களிடம் எடுத்துச்சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். பெண்களுக்காக திமுக தலைவர் கொண்டு வந்துள்ள திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில், வேட்பாளர் ஆர்.டி.சேகர், மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் இருந்தனர்.

Related Stories: