சென்னை: வாணியம்பாடி தவெக வேட்பாளர் சையது புர்ஹானுதீனுக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன் அனுப்பியுள்ளது. 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் 5வது முறையாக தவெக வேட்பாளருக்கு சம்மன் அனுப்பியது. 140க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி அரசுக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார். ரூ.600 கோடி ஜிஎஸ்டி மோசடியில் கடந்த ஆண்டும் நவம்பர் 23 ஜுனைத் அகமது என்பவர் கைதானார்.
ஜுனைத் அகமதுவின் செல்போன்கள், மடிகணினிகளை ஆய்வு செய்தபோது சையது புர்ஹானுதீனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ரூ.600 கோடி மோசடியில் சையது புர்ஹானுதீன், அவரது உறவினர் சையது அஸ்பத்துல்லா முக்கிய நபர்களாக செயல்பட்டது கண்டுபிடிப்பு. மோசடி தெரியவந்ததை அடுத்து, சையது புர்ஹானுதீன் தொடர்புடைய இடங்களில் கடந்த டிசம்பர் 10ல் சோதனை நடந்தது.
சோதனையை தொடர்ந்து டிசம்பர் 11ம் தேதி ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆஜராக சையது புர்ஹானுதீனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. டிசம்பர் 11ல் ஆஜராகாததால் சையது புர்ஹானுதீனுக்கு அதே 2 முறை ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன் அனுப்பியது. சம்மனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சையது புர்ஹானுதீன் விசாரணைக்கு ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து கடந்த மார்ச் 23ம் தேதி சம்மன் அனுப்பியும் சையது புர்ஹானுதீன் ஆஜராகவில்லை. மார்ச் 23ல் உடல்நிலை சரியில்லை என கூறி ஆஜராகாத சையது புர்ஹானுதீன் மார்ச் 29ல் தவெக கூட்டத்தில் பங்கேற்றார். அண்மையில் ஜிஎஸ்டி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த சையது புர்ஹானுதீன், தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டார்.
வரும் ஏப்ரல் 6ம் தேதி தவெக வேட்பாளர் சையது புர்ஹானுதீன் மீண்டும் ஆஜராக ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 6ம் தேதி சையது புர்ஹானுதீன் ஆஜராகாதபட்சத்தில் கைது செய்யப்படலாம் என ஜிஎஸ்டி ஆணையரக வட்டாரங்களில் தகவல் தெரிவித்துள்ளது.
