கரூர், ஏப். 2: சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தியும், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள், பேரணிகள், கோலங்கள், வாக்காளர் உறுதிமொழி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி 134 அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் ரம்யா தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கபப்ட்டது, இதில் வி.எஸ்.பி இஞ்சினியரிங் கல்லூரியில் மாணவ, மாணவிகள் ‘நம் வாக்கு நம் உரிமை’ என்ற வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் புகழூர் வட்டாட்சியர் முருகன், கல்லூரி முதல்வர் டாக்டர் வெண்ணிலா, மக்கள் தொடர்பு அலுவலர் ராமலிங்கம் மற்றும் க.பரமத்தி வருவாய் ஆய்வாளர் முத்துபிரியன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமி, கிராம உதவியாளர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
