தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வங்கிகளில் அதிக பண பரிவர்த்தனை செய்தால் தகவல் அளிக்க வேண்டும்

 

கரூர், மார்ச் 29: வங்கிகளிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் ரூ.50,000 அதிகமான பணம் எடுத்தலோ அல்லது டெபாசிட் செய்தாலோ அது குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலரும் ரவிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து ஒரு மாவட்டம், தொகுதியில் உள்ள பல நபர்களின் கணக்குகளுக்கு வழக்கத்திற்கு மாறான பணப் பரிமாற்றம் செய்தால் அதுகுறித்த தகவலை அளிக்க வேண்டும். தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வேட்பாளர் அல்லது அவருடைய மனைவி அல்லது அவரைச் சார்ந்தவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தலோ அல்லது ரொக்கமாக பெற்றாலோ அது குறித்த தகவலை வழங்க வேண்டும்.

அரசியல் கட்சி கணக்கில் 1,00,000 ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கம் திரும்பப் பெறுதல் மற்றும் டெபாசிட் செய்தல் குறித்த தகவல்களையும் அளிக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய வேறு ஏதேனும் பணப் பரிவர்த்தனைகள், வாக்காளர்களுக்கு லஞ்சமாகக் கொடுக்கப் பயன்படுத்தப்படலாம். எனவே அது குறித்த தகவல்களும் வழங்க வேண்டும். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க பணம் பயன்படுத்தப்படலாம் என்று சந்தேகம் இருந்தால், சரியான ஆய்விற்குப் பிறகு தேவையான நடவடிக்கை எடுக்க பறக்கும் படைக்கு தகவல் அனுப்பபடும். ரொக்க வைப்புத்தொகை அல்லது திரும்பப் பெறுதல் அளவு ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால், வருமான வரிச் சட்டங்களின் கீழ், தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக, வருமான வரித் துறைக்கு தகவல் அனுப்பப்படும்.

இந்திய கூட்டமைப்ப (IDA) நயவாக்க குழு, அனைத்து வங்கிகளின் கிளைகளுக்கும் பணத்தைக் கொண்டு செல்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட ஏஜென்சிகள், வங்கியின் பணத்தை எடுத்துச் செல்லும் நிறுவனங்களின் கேஷ் வேன்கள். எந்த சூழ்நிலையிலும், வங்கிகளைத் தவிர வேறு எந்த மூன்றாம் தரப்பு ஏஜென்சிகள், தனிநபர்களின் பணத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்பதை வங்கி உறுதி செய்ய வேண்டும். ஏடிஎம்களில் பணம் செலுத்துவதற்கும், மற்ற கிளைகள், வங்கிகள் அல்லது கரன்சி பெட்டகங்களுக்கு பணத்தை டெலிவரி செய்வதற்கும் வங்கிகளால் வெளியிடப்பட்ட பணத்தின் விவரங்கள் மற்றும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடிதங்கள், ஆவணங்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும், https://cvigil.ecl.gov.in என்ற இணைய தளத்தில் உரிய தகவல்கள் அளித்து QR code ஐ Generate செய்து வாகனங்களில் ஒட்டி எடுத்துச் செல்ல வேண்டும். மேற்படி QR code-ஆனது பறக்கும் படை குழுவினரால் சோதனை செய்யப்படும். பணம் கொண்டு செல்லும் வாகனங்களில் பயணிக்கும் அவுட்சோர்சிங் ஏஜென்சிகள் வங்கி நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரும் அந்தந்த நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட ஏஜென்சி, நிறுவனத்தின் கேஷ் வேனை சோதனைக்காக இடைமறித்தால், அந்த நிறுவனம் வங்கியின் ஏடிஎம்களில் பணத்தை நிரப்புவதற்காகவோ அல்லது வங்கியின் வேறு கிளைகளுக்கு பணத்தை டெலிவரி செய்வதற்காகவோ எடுத்துச்செல்லும் நிலையில் தேர்தல் அலுவலர்களிடம் அதற்கான உரிய ஆவணங்களை காண்பிக்கவும். ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும்.

நகை அடமானம் பெறுவோர் மற்றும் நகை கடை உரிமையாளர்களுக்கான விதிமுறைகள்:அரசியல் கட்சியினர் வழங்கும் டோக்கன்களை பெற்றுக்கொண்டு பணம் வழங்கும் பணிகளில் ஈடுபடக் கூடாது. எந்தவொரு வேட்பாளரோ, அரசியல் கட்சியினரோ வழக்கத்திற்கு மாறாக அல்லது சந்தேகத்திற்கிடமாக அதிகளவில் நகைகளை அடமானம் செய்து பணம் பெற்று வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக பயன்படுத்தப்படலாம் என்பதால், இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமாக பணப்பரிவர்த்தனை குறித்து தகவல்கள் ஏதும் வரப்பெற்றால் உடனடியாக பறக்கும்படை சோதனை செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.

தகுந்த ஆவணங்கள் இல்லாது பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டால் வருமானவரி துறையினர் மூலம் சோதனை செய்து பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சந்தேகத்திற்கிடமான அல்லது சட்டவிரோதமான பணம், வெளிநாட்டுப் பணம், இந்திய பணத்தின் கள்ள நோட்டுக்கள் ஏதும் கண்டறியப்பட்டால் காவல்துறை மற்றும் வருமான வரி துறை மூலம் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யப்படும். நகை அடமானம் பெறுவோர் மற்றும் நகை கடை உரிமையாளர்கள் விதிகளுக்குட்பட்டு தான் பணப்பரிவர்த்தனை செய்யப்பட வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: