கரூர் சட்டமன்ற தொகுதிகளில் ஒரே நாளில் 28 பேர் மனுதாக்கல்

 

கரூர், மார்ச் 31: கரூர் சட்டமன்றத்தொகுதியில் நேற்று முதல் நாளில் 28 வேட்பாளர்கள் மனுவை தாக்கல் செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் நேற்று காலை 11 மணி முதல் 3 மணி வரை தங்கள் வேட்புமனுவை ஆர்வத்துடன் தாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 28 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி கடந்த 15ம்தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் 30ம்தேதி முதல் ஏப்ரல் 6ம்தேதி வரை போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் எனவும் அறிவித்திருந்தது.

அதன்படி, மார்ச் 30ம்தேதியான நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை கரூர் கோட்டாட்சியர் அலுவலகம், குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகம், அரவக்குறிச்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்து சென்றனர். வேட்புமனு தாக்கல் வரும் ஏப்ரல் 6ம்தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுவை 9ம்தேதிக்குள் வாபஸ் பெறலாமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்புமனு நிகழ்வு நேற்று முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா உட்பட 14 வேட்பாளர்களும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 9 வேட்பாளர்களும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 3 வேட்பாளர்களும், அரவக்குறிச்சி தொகுதியில் 2 வேட்பாளர்கள் என நேற்று ஒரே நாளில் நான்கு தொகுதிகளிலும் 28 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கரூர்: கரூர் சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக கட்சி அலுவலகத்தில் இருந்து மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பசுவைசிவசாமி, மாவட்ட அவைத்தலைவர் எஸ்.திருவிகா மற்றும் பாஜக மாவட்டத்தலைவர் வி.வி.செந்தில்நாதன், பாமக மாவட்டச் செயலாளர் புகழூர் சுரேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும், கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளர் மருத்துவர் திவ்யா, குளித்தலை வேட்பாளர் கருணாகரன், அரவக்குறிச்சி வேட்பாளர் எம்.ஆர்.கே செல்வகுமார் உள்ளிட்டோர் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக 80 அடி சாலை, கோவைச் சாலை, ஜவஹர்பஜார் வழியாக வந்தனர். பின்னர் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தனர்.

பின்னர் பிற்பகல் 12.48 மணிக்கு கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், கரூர் கோட்டாட்சியருமான சு. சத்திய பால கங்காதரனிடம் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக உறவினர் கவின் மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் சொத்து மதிப்பு விவரம்}எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயரில் அசையும் சொத்து} ரூ.4,33,90,321. அசையா சொத்து விவரம்}1,40,74,853. மனைவி விஜயலட்சுமி பெயரில் அசையும் சொத்து}ரூ.5,39,22,047}ம், அசையா சொத்தாக ரூ.212,34,072ம் உள்ளன.

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் முதல் நபராக மதியம் 1.10 மணியளவில் சாமானிய மக்கள் நலக் கட்சி வேட்பாளர் கரூர் அருகே சணப்பிரட்டி (ஆர்.எஸ்) பகுதியை சேர்ந்த முத்துவேலு என்பவரது மகன் ராஜகுரு என்பவர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் சிவக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பின்னர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த குளித்தலை பாரதி நகர் சத்யா என்பவர் மதியம் 2.40 மணியளவில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளராக கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரம் பகுதியை சேர்ந்த கீதா என்பவர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் முதல் நாளில் 3 பேர் (மாற்று வேட்பாளர் உட்பட) வேட்பு மனு தாக்கல் செய்தனர். கரூர் ஏடிஎஸ்பி பிரபாகரன் தலைமையில், டிஎஸ்பி செந்தில்குமார் இன்ஸ்பெக்டர் முத்தையா, சுரேஷ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நரேன் மற்றும் சக்திவேல் ஆகிய 2 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். முதல் நாளில் அதிகமான வேட்பு மனு தாக்கல் நடைபெறும் எனக் கருதி அரவக்குறிச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் நாம் தமிழர் கட்சி சார்பில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். வருகின்ற புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் முக்கிய கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்யலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Related Stories: