சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

சேலம், ஏப்.2:தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடக்கிறது. இதனையடுத்து சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிக வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, சேலம் குகை நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வீரலட்சுமி வித்யாலயா உயர்நிலைப்பள்ளி, வீரலட்சுமி வித்யாலயா தொடக்கப்பள்ளி, தாதகாப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சஞ்சீவராயன் பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சீலநாயக்கன்பட்டி என்.பி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார்.

அப்போது, வாக்குப்பதிவு நாளன்று குடிநீர், நிழலுடன் கூடிய காத்திருப்புப் பகுதி, கழிப்பறை, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்குச் சரிவுடன் கூடிய சாய்வுப்பாதை, முறையான வழிகாட்டிப் பலகைகள், இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்தும், வாக்காளர்கள் வாக்குச்சாவடி மைய நுழைவு வாயிலிருந்து தங்களுக்கான வாக்குச்சாவடிக்கு செல்லும் வகையில் வண்ணக் குறியீடுகள் அமைக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வுகளின்போது, சேலம் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவன் உடனிருந்தார்.

Related Stories: