சேலம், மார்ச் 28:கோடை வெயில் சுட்டெரிப்பதால் ரயில் பயணத்தின்போது கவனமாக செல்ல வேண்டும் என்றும், எளிதில் தீ பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்றும் பயணிகளிடம் ஆர்பிஎப் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனால், மதிய வேளையில் வெளியில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த கோடை வெயில் காலத்தில், ரயில்களில் எளிதில் தீ பற்றும் பொருட்களை பயணிகள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் ஆர்பிஎப் போலீசார் மூலம் பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கோடை காலம் என்பதால், பகல் நேரத்தில் ரயில்களில் பயணிக்கும் மக்கள், மிக கவனமாக பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். இதில், தாங்கள் கொண்டு வரும் உடைமைகளில் தீப்பெட்டி, பட்டாசு, சிகரெட் லைட்டர், சிறிய காஸ் சிலிண்டர் உள்பட எளிதில் தீ பற்றும் பொருட்கள் எதையும் வைத்திருக்கக் கூடாது. மீறி அதனை எடுத்து வந்தால், ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்பிஎப் போலீசார் எச்சரித்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் ஆர்பிஎப் போலீசில் தனிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, ரயில்களில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
அதேபோல், கோடை கால திருட்டு சம்பவங்களை தடுக்கவும் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். ரயில்களில் சந்தேகப்படும் படி யாரேனும் சுற்றித்திரிந்தால், உடனடியாக 139 என்ற உதவி தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொண்டுள்ளனர். இதுபற்றி ஆர்பிஎப் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரயில்களில் கோடை கால திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால், விபத்து தவிர்ப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எளிதில் தீ பற்றும் பொருட்களை எடுத்து வரக்கூடாது என்பதை அறிவுறுத்தி, பயணிகளிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. தீ பற்றும் பொருட்களை ரயிலில் எடுத்து வருவது குற்றம். அதனால், அதனை மக்கள் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்,’’ என்றனர்.
