சேலம், மார்ச் 27: சேலம் அம்மாப்பேட்டையில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம், சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் நேற்று பெண்கள் வண்ண கோலமிட்டனர். பின்னர், ‘ஜனநாயகத்தை வலுப்படுத்த தவறாமல் வாக்களிப்போம், எனது வாக்கு எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மனித சங்கிலி, விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி, அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் இருந்து மெயின்ரோடு, ஜோதி தியேட்டர், கார்பெட் தெரு வழியாக ஐயாசாமி பூங்காவில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
