திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கோலாகலம்

திருத்தணி, ஏப்.2: பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில், ஏராளமான பக்தர்கள் காவடிகள் சுமந்தும் உடல் முழுவதும் அலகு குத்தி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகப் பூஜைகள் நடைபெற்று, தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பங்குனி உத்திர பெருவிழாவில் பங்கேற்க சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்த குழுக்கள் திருத்தணி முருகன் மலை கோயிலுக்கு படிகள் மற்றும் மலைப்பாதை வழியாக மலைக் கோயிலில் குவிந்தனர்.

பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் பால், பன்னீர், மயில் காவடிகளுடன் உடல் முழுவதும் அலகு குத்திக்கொண்டு, பக்தி பரவசத்துடன் பம்பை உடுக்கை, மேள தாளங்கள் முழங்க, கோயில் மாட வீதிகளில் பொதுவழியில் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். காலை 10 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பாலாபிஷேகம், விபூதி, பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை செய்யப்பட்டது. காவடி மண்டபத்தில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பங்குனி உத்திரப் பெருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டது.

Related Stories: