பொக்கிஷமாகும் டவல் பொக்கே!

நன்றி குங்குமம் தோழி

நாம் செய்யும் தொழிலை திறமையாகவும் அதே சமயம் அதில் தனித்துவத்தை புகுத்தும் போதுதான் இன்றைய போட்டி நிறைந்த உலகில் நாம் வெற்றியினை காண முடியும். அதில் ஒருவர்தான் கீதா சரவணன். இவரின் இந்த அணுகுமுறைதான் மாதம் லட்சங்களில் தன்னுடைய பிசினஸினை டர்ன் ஓவர் செய்யும் ஒரு தொழில்முனைவோராக மாற்றியிருக்கிறது.

‘‘பெரும்பாலான பெண்கள் தங்களின் வாழ்க்கையில் ஏதாவது சின்ன பிரச்னை வந்தால் உடனே தவறான முடிவினை தான் எடுக்கிறார்கள். அப்படி எடுக்க நினைப்பவர்கள் என்னிடம் வாங்க… உங்களுக்கான வெற்றிப் பாதைக்கான வழியினை நான் காட்டுகிறேன்’’ என்று பேசத் துவங்கினார் கீதா சரவணன். இவர், ‘சித்து ஸ்ரீ பிரைடல் கேர் அண்ட் சித்து ஸ்ரீ கிராஃப்ட்ஸ்’ என்ற பெயரில் மேக்கப் மற்றும் கலைப்பொருட்கள் வடிவமைத்து வருகிறார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் திருச்சி,் துறையூர். கல்லூரிப் படிப்பு முடித்த கையோடு வீட்டில் திருமணம் பேசி முடித்துவிட்டார்கள். என் கணவர் சொந்தமாக ெதாழில் செய்து வருகிறார். ஒருநாள் தொலைக்காட்சியில் பிரைடல் மேக்கப் குறித்த பயிற்சி அளிப்பது பற்றிய விளம்பரம் வந்தது. அது குறித்து என் கணவரிடம் கேட்ட போது அவர் விருப்பம் இருந்தால் கற்றுக்கொள் என்று என்னை ஊக்குவித்தார். நானும் பயிற்சியினை முடித்தேன். என்னுடைய முதல் கிளையன்ட் என் சித்திப் பெண்தான். அவளின் திருமணத்திற்கு நான்தான் மேக்கப் போட்டு விட்டேன்.

அதைப் பார்த்து பலரும் கேட்க ஆரம்பிக்க… அப்படித்தான் நான் முழுமையாக மேக்கப் கலைஞராக மாறினேன். தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு மேக்கப்போட ஆரம்பித்தேன். மேக்கப் மட்டுமில்லாமல் புடவைக்கு மேட்சாக பூ அலங்காரமும் செய்தேன். அதனால் என்னுடைய வாடிக்ைகயாளர் வட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது’’ என்றவர், 2012ல் தன் இரு மகன்களின் பெயரைக் கொண்டு ‘சித்து ஸ்ரீ பிரைடல் கேர்’ என்ற பெயரில் ேமக்கப் மற்றும் பிரைடல் பூ அலங்காரம் குறித்து பயிற்சியும் அளிக்க துவங்கியுள்ளார்.

“பிரைடல் பொறுத்தவரை பல வகையான மேக்கப்கள் உள்ளன. அதாவது, வாட்டர் ப்ரூஃப் மேக்கப், கிளாஸி மேக்கப், நோ மேக்கப் லுக்… இவை அனைத்தும் நான் கற்றுக்கொண்டு செய்ய ஆரம்பித்தேன். அதேபோல் பூ அலங்காரத்திலும் என்னுடைய கிரியேட்டிவிட்டிக்கு வேலை கொடுத்தேன். இவை தவிர சாரி டிரேப்பில், மெஹந்தி என ஒரு மணப்பெண்ணிற்கு தேவையான அனைத்தும் செய்ய ஆரம்பித்தேன். திருச்சி மட்டுமில்லாமல் தஞ்சாவூர் போன்ற சுற்றுவட்டாரங்களில் இருந்தும் எனக்கு வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அது எங்களின் தொழிலை பெரிய அளவில் பாதித்தது. எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு, மீண்டும் என்னுடைய தொழிலை துவங்கினேன். அந்த சமயத்தில் திருச்சியில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் ஆன்லைன் மூலமாக மாணவிகளுக்கு பிரைடல் மேக்கப் மற்றும் ஃபிளவர் மேக்கிங் குறித்த பயிற்சி அளிக்கும் படி கேட்டார்கள்.

எனக்கும் அந்த சமயத்தில் மீண்டும் எழுவதற்கான வாய்ப்பு என்பதால் மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். அதற்கான சான்றிதழ்களும் வழங்கியதால் அந்தக் கல்லூரியை தொடர்ந்து மேலும் சில கல்லூரிகள் தங்களின் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க சொல்லி கேட்டுக் கொண்டார்கள். சுமார் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு நான் பயிற்சி அளித்தேன்’’ என்றவர் டவர் பொக்கே குறித்து பகிர்ந்தார்.

‘‘பொதுவாக நாம் ஒருவரை வரவேற்கும் போது பூங்கொத்தினை கொடுப்பது வழக்கம். பூக்கள் வாடிவிட்டால் அதை தூக்கி எறிந்துவிடுவோம். அப்படி இல்லாமல் அந்த பொக்கே பயனுள்ளதாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற என்னுடைய அந்த சிந்தனையின் உருவாக்கம்தான் டவல் பொக்கே. டர்கி டவலைக் கொண்டு பொக்கே, பொம்மைகள் எல்லாம் செய்ய ஆரம்பித்தேன். அதையும் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளித்தேன். அதைப் பார்த்த கல்லூரி ஆசிரியர்கள் டவல் பொக்கேவினை ஆர்டர் செய்ய ஆரம்பித்தார்கள். இப்போது அதுவும் என்னுடைய ஒரு பிசினஸாக மாறிவிட்டது. அடுத்து இதில் மாலையும் செய்ய துவங்கியிருக்கிறேன்.

ஒரு முறை நான் தென்காசி மாவட்டம், அயக்குடியில் அமர் சேவா சங்கத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு டவல் பொக்கேவை தயார் செய்வது குறித்து வகுப்பு எடுக்க சென்றேன். பயிற்சி முடித்த பிறகு அங்குள்ள ஆசிரியர்கள் ‘பொக்கே என்றால் டவலை கத்தரித்து அதில் பூக்களை வடிவமைத்து செய்வீர்கள் என்று நினைத்தோம். ஆனால், நீங்க அதை அழகாக மடித்து பொக்கே உருவாக்கிவிட்டீர்கள்’ என்று ஆச்சரியப்பட்டார்கள்.

என்னுடைய நோக்கமே ஒரு பரிசுப் பொருளை பயன்படுத்த வேண்டும் என்பதுதான். அதை கத்தரித்துக் கொடுத்தால் என்ன பலன்? அதனால்தான் அப்படி செய்யாமல் அதை அழகாக மடித்து பொக்கேவாக உருவாக்கினேன் என்று கூறினேன்’’ என்றவர், பெண்கள் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

‘‘வாய்ப்பு கிடைத்தால் அதை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று யோசிப்பேன். கல்லூரி, பல்கலைக்கழகத்தில் வகுப்பு எடுக்க அழைத்தாலும் சரி, பக்கத்து தெருவில் இல்லத்தரசி பயிற்சி அளிக்க சொல்லிக் கேட்டாலும் சொல்லித் தருவேன். அதுதான் என்னுடைய வெற்றியின் ரகசியம் என்று நினைக்கிறேன். இதுவரை 2000த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். பெண்கள் வெளியே சென்றுதான் வேலை பார்க்க வேண்டும் என்றில்லை. வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க பல தொழில்கள் உள்ளன. அதை கற்றுக் கொண்டு தங்களுக்கான வருமானத்தை ஈட்டலாம். ஒரு தொழிலை துவங்கியதும் லாபம் கிடைக்காது. தொடர்ந்து முயற்சித்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்’’ என்றார் கீதா.

தொகுப்பு: ஜோதி

Related Stories: