மனிதநேயமே எனது மார்க்கெட்டிங் உத்தி!

நன்றி குங்குமம் தோழி

‘‘ஒரு தொழிலைத் தொடங்கி, அதில் ஜெயிக்க கோடிக்கணக்கான முதலீடோ, மிகப்பெரிய மார்க்கெட்டிங் தந்திரமோ தேவையில்லை. வாடிக்கையாளர்களை தன் சொந்தக் குடும்பமாக நினைத்து, அவர்களின் ஆரோக்கியத்தில் காட்டும் உண்மையான அக்கறையும், தரத்தில் சமரசம் செய்ய மாட்டேன் என்கிற நேர்மையுமே மிகப்பெரிய மூலதனம்’’ என்கிறார், தனது ‘ராஜம்மா’ஸ் கைமணம் பாரம்பரிய உணவு தயாரிப்பின் வழியாக வித்யா.

வேகமாய் ஓடுகிற இந்த நவீன யுகத்தில், நாம் சாப்பிடும் சாப்பாட்டின் தரம் என்ன என்பதே மிக முக்கியமான கேள்வி? பல மாதம் கெடாமல் இருக்க, உணவுப் பொருட்களில் ரசாயனம் கலந்து, அதேசமயம் உடலுக்கு கேடு தரும் பிளாஸ்டிக் கவர்கள், டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்பதையே தேடித்தேடி வாங்கி நாம் உண்கிறோம். ஆனால், நமது பாட்டிமார்கள் தயாரித்த பாரம்பரியமான, ஆரோக்கியமான, உடம்புக்கு நன்மை தருகிற உணவுகளை நாம் தொலைத்துவிட்டோம்.

யோசித்துப் பார்த்தால், நம் முன்னோர்கள் ‘உணவே மருந்து’ என்கிற தத்துவத்தை பின்பற்றியவர்கள். ஆனால், இன்றைக்கு, நாவின் சுவைக்காகவும், நேரமில்லை என்கிற காரணத்திற்காகவும், ஆரோக்கியத்தையே பணயம் வைக்கிறோம்.நம் பாட்டியோ இல்லை கொள்ளு பாட்டியோ ருசியாகச் செய்த, காலப்போக்கில் வீட்டில் யாரும் செய்யாமல் மறைந்து போன, பாரம்பரிய ரெசிபி ஏதாவது கண்டிப்பாக வீடுகளில் இருக்கும். இந்த இடத்தில்தான் தன் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே கொடுக்கணும் என்கிற தேடல் வித்யாவுக்குள் வர ஆரம்பித்திருக்கிறது. இந்த தேடல்தான் ராஜம்மா’ஸ் கைமணம் உருவாக அடித்தளமாக இருந்திருக்கு.

நவீன காலத்தில் வாழ்கிறவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற மாதிரியாக அதனை மாற்றி உருவாக்கி ஆரோக்கியமாகவும் அதே சமயம் சுவைபடவும் தருகிறார் வித்யா. வீட்டில் தன் குழந்தைகளுக்காக வித்யா செய்து கொடுத்த பாரம்பரிய லட்டு இன்றைக்கு, வித்யாவின் தொழிலாகவே மாறியிருக்கிறது. அதுவும் அவர் தயாரிப்பது ஒரே வகையான லட்டுகள் இல்லை. 16 வகையான விதவிதமான வித்தியாசமான லட்டுகள். இதில் ஒரு துளியும் சுவையூட்டியோ, செயற்கை வண்ணங்களோ, ரசாயன கலப்புகளோ இல்லை. அத்தனையும் பாரம்பரிய முறையில் தயாரானவை.

‘‘ராஜம்மா என்பது என் அம்மாவின் பெயர். கைமணம் என்பது இயந்திரம் உதவியின்றி, கிராமங்களில் நமது பாட்டிமார்கள் கைகளால் பக்குவமா செய்கிற பாரம்பரிய முறையை குறிக்கும் வார்த்தை. என் அம்மாவின் மேலிருக்கும் அன்பையும், நமது பாரம்பரியத்தின் மேலிருக்கும் மரியாதையும் சேர்த்தே இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்’’ என்கிறார் வித்யா.

செடியில் பூத்து தரையில் கொட்டி வீணாகும் செம்பருத்தி பூக்களை சேகரித்து, நிழலில் உலர்த்தி செம்பருத்தி பூ லட்டு, ஆவாரம் பூக்களை கொண்டு, ஆவாரம் பூ லட்டு, முருங்கை கீரையினை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, அத்துடன் முளைகட்டிய ராகி மாவை இணைத்து முருங்கை லட்டு என விதவிதமான லட்டுகளை தயாரிக்கிறார். சமீபத்தில் ஆம்லா, பீட்ரூட், கேரட் மூன்றும் கலந்த இனிப்பும் புளிப்புமான ஏபிசி லட்டு ஒன்றையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

வெள்ளை அரிசி தவிர்த்து, பாரம்பரிய மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ரத்தசாலி, காட்டுயானம், பூங்கார் அரிசி ரகங்களை சத்து மாவு தயாரிப்பில் பயன்படுத்துவதுடன், வழக்கமான ஊறுகாய் ரகம் தவிர்த்து, ரத்தத்தை சுத்திகரிக்கும் மாகாளிக் கிழங்கு ஊறுகாய், பசுமஞ்சள் ஊறுகாய், மூட்டு வலிகளைத் தீர்க்கும் முடவாட்டுக்கால் தொக்கு என விதவிதமான ரகங்களைத் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறார்.

கடைகளில் வாங்கும் ஊறுகாய் கெடாமல் இருக்க, பாதிக்கு மேல் எண்ணெயும் உப்புமே பாட்டிலில் மிதக்கும். ஆனால், வித்யாவின் ஊறுகாய் தயாரிப்பு முறை இதிலிருந்து முற்றிலும் வேறானது. மாகாளி கிழங்கு ஊறுகாயில் எண்ணெய் சேர்க்காமல், எலுமிச்சை சாறு, மஞ்சள், கல் உப்பு சேர்த்து செய்வதால், நீண்டநாட்கள் கெடாமல் அப்படியே பயன்படுத்தலாம் என்கிறார்.

‘‘என் வியாபார உத்தியே தரத்தில் சமரசம் செய்யக் கூடாது என்பதுதான். செலவு அதிகமானாலும் நம்பகமான தரமான மரச்செக்கு நல்லெண்ணெய், கலப்படம் இல்லாத சுத்தமான பசு நெய் என்றே வாங்கி பயன்படுத்துகிறேன். மக்கள் என் பொருளின் உண்மையான தரத்தை ருசி பார்த்ததுமே புரிந்துகொள்கிறார்கள்’’ என்றவர், ஒவ்வொரு புது தயாரிப்பையும், பல மாதங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து, எந்தவித பக்க விளைவும் இல்லை என முழுமையாக திருப்தி அடைந்த பிறகே, விற்பனைக்கே கொண்டு வருகிறேன்.

கல்லூரி நிகழ்ச்சிகளில் இடம்பெறும் ஸ்டால்கள் மற்றும் ஒரு சில சந்தைப்படுத்துதல் நிகழ்வுகளில் பங்கேற்று ஒரே நாளில் 30,000 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை நடந்ததை குறிப்பிட்டவர், எந்தவொரு விளம்பரமும் இல்லாமல், எனது தயாரிப்பின் தரம் வாய் வழியாகவே மக்களிடம் பரவியுள்ளது. இன்று ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் அலுவலகம், கமிஷனர் அலுவலகங்களில் நடைபெறும் பணி மாற்றல் நிகழ்வு, பணி நிறைவு விழாக்கள், பெண்களின் வளைகாப்பு நிகழ்ச்சி என மிக்ஸர், லட்டு ஆர்டர்கள் மொத்தமாகவும் வருகிறது.

வித்யாவின் தயாரிப்பை அஞ்சப்பர், நாயர் மெஸ் மாதிரியான மிகப்பெரிய உணவகங்களே தேடி வந்து வாங்கி அவர்களின் பிராண்டில் விற்கும் அளவுக்கு சாதாரண வீட்டு சமையலறையில் தொடங்கிய சிறு முயற்சி, இன்றைக்கு, பெரிய பெரிய பிசினஸ் ஆட்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருப்பதை நினைத்து பூரிப்படைகிறார் வித்யா. ‘‘என்னிடத்தில் உணவுப் பொருட்களை வாங்கும் முதியவர்களுக்கும், புற்று நோயாளிகளுக்கும், எந்தவித லாபநோக்கமும் இன்றி, குறைந்த விலைக்கு கொடுப்பதுடன், ஆசையோடு லட்டை உற்று நோக்கும் குழந்தைகளுக்கும், பணம் பெறாமலே லட்டுகளை வழங்குகிறேன்’’ என்கிறார் இவர்.

‘‘ராஜம்மா’ஸ் கைமணத்தோட தத்துவமே ஹியூமன் டச்தான். பணத்தை விட மனிதநேயம்தான் என் மார்க்கெட்டிங் உத்தி’’ என்கிறார். மேலும், இந்த உண்மையான அன்பும் அக்கறையுமே, நிரந்தரமான வாடிக்கையாளர்களை வித்யாவுக்கு உருவாக்கி கொடுத்திருக்கிறது. வித்யாவின் அசுரத்தனமான உழைப்பும் இதில் இருக்கிறது.

பசிதான் சாப்பாட்டின் மதிப்பை உணர்த்தியது!

‘‘திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பக்கம் இருக்கிற அரியலூர் என்கிற சின்ன கிராமம்தான் என் ஊர். வெளிப்படையா சொன்னா, ரேஷன் அரிசி வாங்கவும் வழியில்லாத வறுமையில் உழன்ற காலம் அது.வீட்டுல இருந்த மூணு பெண் குழந்தைகளில் நான் மட்டுமே படிக்க போனேன். நீயும் வீட்ல இருந்தா படிக்க முடியாது. ஒரு வேளை சாப்பாடும் சரியா கிடைக்காது. அதனால விடுதியில் சேர்ந்துடு. மூணு வேள சாப்பாடாவது கிடைக்கும்னு சொல்லி முத்துப்பேட்டையில இருக்கிற அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில பெற்றோர் சேர்த்தாங்க.

அரசு விடுதியில கிடைச்ச அந்த சாப்பாடு அமிர்தம் மாதிரி எனக்கு இருந்தது. பசிதான் சாப்பாட்டோட உண்மையான மதிப்பை எனக்கு உணர்த்தியது. வாழ்க்கையில நாமளும் ஏதாவது ஒன்றை சாதிக்கணும்ற சிந்தனை உருவாக ஆரம்பித்தது.பள்ளிப் படிப்பு முடித்ததுமே, திருச்சி கல்லூரியில் இணைந்து ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படித்தேன். பிறகு சென்னை செல்லம்மாள் கல்லூரியில் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி படிக்கும் போது, இரண்டாம் ஆண்டிலே படிப்பை பாதியில் விடவேண்டிய நிலை வந்தது. பிறகு பணியாற்றிய படி, வக்கீல் படிப்பை முடித்தேன். கூடவே ஓவியம் வரைவது, கைவினை பொருட்களை செய்வதுன்னு திறமைகளையும் வளர்த்துக் கொண்டேன்.

இந்த நிலையில்தான் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றிலும் 15 வருடங்கள் மனித வளத்துறையில் வேலை செய்து வந்தேன். எனது திருமணத்துக்குப் பிறகு, குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்படவே, 15 வருட கெரியரை அப்படியே விட்டுட்டு, வீட்டில் இருந்து குழந்தைகளை கவனிக்கத் தொடங்கினேன்.

என் குழந்தைகளுக்கு எந்தக் காரணம் கொண்டும் வெள்ளை சர்க்கரையை கொடுக்கக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்ததால், தினை மாதிரியான சிறுதானியங்களையும் உலர் பழங்களையும் இணைத்து வீட்டிலே லட்டு தயாரிக்க ஆரம்பித்து, பிறகு என் குழந்தைகளோடு பள்ளியில் படிக்கிற மற்ற குழந்தைகளுக்கும் கருப்பு உளுந்தில் லட்டு செய்து கொடுக்க ஆரம்பித்தேன். லட்டு பிடித்து, பலரும் இது குறித்து கேட்க ஆரம்பிக்க, இப்படியாகத்தான் இந்த விஷயம் மெல்ல மெல்ல சிறு தொழிலாக மாற ஆரம்பித்தது.’’

செய்தி:மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்

Related Stories: