நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

எதிர்கால சமையல்

வருங்காலத்தில் சமையல் என்பது வெறும் வெப்பப்படுத்துவது மட்டுமல்ல, அது ஒரு ஸ்மார்ட் அனுபவமாக இருக்கும் என்கின்றனர். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிரித்து, அதை எரிபொருளாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் ஆராய்ச்சியில் உள்ளது. இது புகையே இல்லாத, முற்றிலும் தூய்மையான எரிசக்தியாக இருக்கும். இது எரியும் போது கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடாது, மாறாக நீராவியை மட்டுமே வெளியிடும்.

நல்ல பசுமை எரிசக்தியாக இருக்கும். ஏஐ சமையல் உதவியாளர்கள் ஏற்கனவே சந்தைக்கு வரத்தொடங்கிவிட்டன. காய்கறிகளை நறுக்குவது முதல் மசாலா சேர்த்து கிளறுவது வரை அனைத்தையும் ஒரு இயந்திரமே செய்யும். நீங்கள் மொபைல் ஆப்பில் சாம்பார் என்று கொடுத்தால் போதும், அதுவே சமைத்துவிடும். ஸ்மார்ட் பாத்திரங்கள் உள்ள சென்சார்கள் உணவு வெந்துவிட்டதா, உப்பு சரியாக இருக்கிறதா என்பதை உங்கள் போனுக்குத் தெரிவிக்கும். முக்கியமாக வருங்காலத்தில் ‘கேஸ்’ என்ற ஒன்றே இல்லாமல் போகலாம். எல்லாமே மின்சாரம் அல்லது பசுமை எரிசக்தி மூலமாகவே இயங்கும்.

வீட்டுப் பணிப்பெண் வேலைக்குச் சம்பளம் ரூ.46 ஆயிரம்!

பெங்களூரைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெண்ணைப் பற்றி இன்ஸ்டா இன்ப்ளூயன்ஸர் ஒருவர் செய்த பதிவுதான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். அந்தப் பெண் தனது மூன்று மற்றும் நான்கு வயதுள்ள இரண்டு மகன்களை கவனித்துக்கொள்வதற்காக இரண்டு ஆயாக்களை நியமித்திருக்கிறார். ஒருவருக்கு சம்பளம் 32 ஆயிரம், இன்னொருவருக்கு சம்பளம் 14 ஆயிரம். ஆக மொத்தம் இரண்டு ஆயாக்களுக்கும் சேர்த்து மாதச் சம்பளமாக 46 ஆயிரம் ரூபாயை கொடுக்கிறார் அந்தப் பெண். குழந்தைகளை கவனித்தல், சமையல், மற்ற வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும். ரூ.32 ஆயிரம் சம்பளம் பெறுபவருக்கு 10 மணி நேரம் வேலை இருக்கும். ரூ.14 ஆயிரம் சம்பளம் பெறுபவருக்கு 5 மணி நேரம்தான் வேலை. இந்தச் சம்பவம் இன்ஸ்டாவில் வெளியான பிறகு பல விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய டால்பி சினிமா!

சமீபத்தில் ஹைதராபாத்தில் டால்பி சினிமா திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனுக்குச் சொந்தமான ‘அல்லு சினிமாஸ்’ மல்டிபிளக்ஸில்தான் இந்த டால்பி சினிமாவும் உள்ளது. ஹைதராபாத்தின் முதல் டால்பி சினிமா திரையரங்கமும் இதுதான். மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரிய டால்பி சினிமா திரையரங்கமும் இதுவே. ஆம்; இதனுடைய திரையின் அகலம் மட்டுமே 75 அடி. உயரம் 66 அடி. இந்தியாவின் மிகச்சிறந்த திரையரங்கமே இதுதான் என்கின்றனர் திரையரங்க நிபுணர்கள்.

உலகைச் சுற்றி வந்த இளம் பயணி!

உலகில் உள்ள 197 நாடுகளுக்குப் பயணம் செய்த இளம் இந்தியர் மற்றும் இளம் ஆசியர் என்ற பெருமையை தன் வசமாக்கியிருக்கிறார், சுபம் குமார். இவரது வயது 24. அதுவும் இந்தியன் கடவுச்சீட்டை மட்டுமே வைத்துக்கொண்டு இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். முக்கியமாக மிகக் குறைந்த செலவில் பயணத்தை நிறைவு செய்திருப்பதுதான் இதில் ஹைலைட். ‘‘பொதுவாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டுமென்றால் பணம்தான் முக்கியம் என்று சொல்வார்கள். உண்மையில் பணத்தைவிட, கனவுதான் முக்கியம்’’ என்கிற சுபம் குமார், பீகாரின் முங்கேர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர். தினமும் அதிகபட்சமாக 500 ரூபாய் செலவில் உலகை வலம் வந்திருக்கிறார் இவர்.

வீல்சேர் மாடல்

மும்பையில் பிறந்த அபோலி ஜரித்திற்கு, எட்டு வயதாக இருந்த போது, அவரது உடலின் வளர்ச்சி திடீரென நின்று போனது. அபோலியின் குடும்பம் வீட்டை விட, அதிக நாட்கள் மருத்துவமனையில்தான் இருந்தனர். பல்வேறு கட்ட பரிசோதனைகள், சிகிச்சைகளுக்குப் பிறகு, அபோலியால் இனிமேல் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் அதிர்ச்சியளித்தனர். அபோலியின் குடும்பம் நிலைகுலைந்து போனது.

இதனைத் தொடர்ந்து வந்த நாட்களில், அபோலியின் சிறுநீரகங்களும் செயலிழந்தன. பள்ளிக்குச் செல்வது கடினமானது. வாழ்க்கையின் ஒவ்வொரு எளிய நிகழ்வுமே கூட அபோலிக்கு எட்டாக்கனியாகத் தோன்றியது. ஆனால், இன்று தனது 22 வயதில் அவர் ஒரு மாடல். மட்டுமல்ல, பாடகி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருது பெற்றவர். இன்ஸ்டா பிரபலம் என பன்முக அடையாளங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் அபோலி.

தொகுப்பு: த.சக்திவேல்

Related Stories: