கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* ஒரு துண்டு வெனிலா விதையை பில்டரில் வைத்து காபி கலந்து பாருங்கள். தனி மணத்துடன் பில்டர் காபி கமகமக்கும்.

* கேக்கிற்கு க்ரீமை அடிக்கும் போது, முதலில் ஐஸ் கட்டிகளை போட்டு, பிறகு ப்ளெண்ட் செய்தால் க்ரீம் சீக்கிரமாகவும், அதிக உப்பலாகவும் வரும்.

* பழம் புளியின் சாறு எடுத்து, மெல்லிய துணியில் வடிகட்டி குழம்பு வைத்தால் குழம்பு நல்ல நிறமாகவும், ருசியாகவும் இருக்கும்.

* கோதுமை ரவை, சாதா ரவை இரண்டும் தலா ஒரு கப் எடுத்து வெறும் வாணலியில் வறுத்து அரை மணி நேரம் ஊறவைத்து, உடன் 2 கப் தேங்காய் துருவல், ¼ கப் மைதா, 2 ஸ்பூன் அரிசி மாவு, தேவையான அளவு வெல்லத்தூள், ஏலக்காய் பொடி, சிட்டிகை உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்து குழிப்பணியார சட்டியில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி வேகவைத்தால் பணியாரம் ரெடி.

– அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

* தக்காளியை வதக்கி மிளகு-சீரகத்துடன் அரைத்து சேர்த்தால் ரசம் ருசிக்கும்.

*தாளிக்கும் போது இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்தால் ரசம் மணக்கும்.

* கொஞ்சம் முருங்கை கீரையை சேர்த்துக் கொண்டால் ரசம் வாசனையாக இருக்கும்.

* வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சேர்த்தால் ரசம் வித்தியாசமான ருசியில் அசத்தும். குடற்புழுக்கள் அழியும்.

– இந்திராணி தங்கவேல், சென்னை.

* கோதுமை மாவில் உப்பு சேர்த்து லேசாக சுட வைத்து நீர் விட்டு கெட்டியாக பிசைந்து அத்துடன் துருவிய கேரட், பீட்ரூட், காலிஃபிளவர், பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி அடை செய்தால் சத்தான அடை ரெடி.

* இட்லி மாவில் உளுந்து போதாமல் மாவு கெட்டியாக இருந்தால் பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து பின் இட்லி வார்த்தால் இட்லி பூ போல இருக்கும்.

* தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற சாதங்களை தயாரிக்கும் போது பொட்டுக் கடலையை வறுத்து கொட்டினால் சுவையாக இருக்கும்.

* வெண்டை, கத்திரி, முருங்கை, வற்றல் குழம்பு வைக்கும் போது சிறிது கடுகு, மஞ்சள், சிறிது மிளகாய் வற்றல் வெறும் வாணலியில் வறுத்து தூளாக்கி கொதிக்கும் குழம்பில் போட்டு இறக்கவும். மணமாக இருக்கும்.

– ச.லெட்சுமி, தென்காசி.

*நெய் காய்ச்சிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சாம்பாரில் கலந்து விட்டால் சாம்பாரில் நெய் மணக்கும்.

*மோர் மிளகாய் செய்யும் போது பாகற்காயையும் நறுக்கிப் போட்டால், வித்தியாசமான ருசியில் இருக்கும்.

*அரிசி குருணையில் உப்புமா செய்்யும் போது குருணை பாதி வெந்ததும், சம அளவு வறுத்த சேமியாவை கொட்டி வேக வைத்து இறக்கியதும், அரை மூடி எலுமிச்சம் பழம் பிழிந்தால் சுவையாக இருக்கும்.

*இஞ்சி, பூண்டு சட்னி தயாரிக்க இரண்டுக்கு மூன்று என்ற விகிதத்தில் பயன்படுத்தினால் ருசியாக இருக்கும்.

– எம்.ஏ. நிவேதா, திருச்சி.

*ராகி மாவை வேகவிட்டு அதில் சப்பாத்தி, பூரி செய்தால் சுவையாக இருக்கும்.

* மஞ்சள் பூசணியை துண்டுகளாக்கி வேகவிட்டு கோதுமை மாவில் பிசைந்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும்.

* சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேகவிட்டு பிசைந்து வெல்ல பாகில் கலந்து பூரணமாக்கி போளி செய்யலாம்.

– கே.நாகலட்சுமி, சென்னை.

Related Stories: