சென்னை விமானநிலையத்தில் இன்று முதல் உள்ளூர் விமான கட்டணங்கள் கிடுகிடு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

மீனம்பாக்கம்: மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதட்டத்தினால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் விமான எரிபொருள் கட்டணங்களும் பலமடங்கு அதிகரித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், பயணிகளின் விமான டிக்கெட் கட்டண உயர்வுக்கு விதித்திருந்த தடையை ஒன்றிய அரசு தளர்த்தியுள்ளது. இதையடுத்து, சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ளூர் விமானக் கட்டணங்கள் இன்று முதல் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா-ஈரான்-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் துவங்குவதற்கு முன்னதாக இருந்த கட்டணங்களைவிட, ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் அனைத்து விமானக் கட்டணங்களும் கிடுகிடுவென உயர்ந்துள்ளன.

சென்னை விமானநிலையத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் தூத்துக்குடிக்கு செல்ல குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.3,608. அதுவே, இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.6,503 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் சென்னையில் இருந்து மதுரை செல்ல, குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.3,129. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,467. இதேபோல் சென்னையில் இருந்து திருச்சிக்கு ஜனவரி மாத குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.3,608. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4,521. சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த ஜனவரி மாத குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.4,351. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4,966.

இதேபோல் சென்னையில் இருந்து டெல்லிக்கு ஜனவரி மாத குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.5,933. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.6,496. மேலும், சென்னையில் இருந்து மும்பைக்கு ஜனவரி மாத குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.3,356. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4,020. இதுதவிர, சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு ஜனவரி மாத குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,293. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.6,047. எனினும், தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் உள்ளூர் விமானங்களில் மட்டும் இந்த கட்டண உயர்வுகள் மிக அதிகமாகவும், சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் உள்ளூர் விமானங்களுக்கு ஓரளவு குறைவாக கட்டண உயர்வுகள் உள்ளன.

இதுகுறித்து ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தரப்பினர் கூறுகையில், தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் சில விமானங்களில் குறைந்த எண்ணிக்கை பயணிகளுடன் இயக்கப்படுவதால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க, இதுபோன்று ஓரளவு விமான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. எனினும், சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் உள்ளூர் விமானங்களில் அதிகமான பேர் பயணிப்பதால், சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு அதிகளவு இழப்பு ஏற்படுவதில்லை. அதனால் அதன் கட்டணங்கள் பெருமளவு உயர்த்தப்படவில்லை என்கின்றனர்.

சென்னை உள்பட பல்வேறு விமான நிலையங்களில் இன்று முதல் கூடுதல் விமான கட்டண உயர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால், ஏற்கெனவே பழைய கட்டணங்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகள், அவர்கள் போர்டிங் பாஸ் வாங்குவதற்கு முன் கூடுதல் கட்டணத் தொகைகளை, ஆன்லைன் மூலமாக செலுத்துவற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் இன்று சென்னை விமான நிலையத்தில் உள்ளூர் விமானங்களில் செல்ல வேண்டிய ஏராளமான பயணிகள் கூடுதல் விமான கட்டண உயர்வால் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும், கோடை விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் விமானங்களில் சுற்றுலா தலங்களுக்கு சென்று வரலாம் என்று திட்டமிட்டிந்த நடுத்தர வர்க்க குடும்பத்தினருக்கு, இந்த விமான கட்டண உயர்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: