கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது தேவாலயங்களில் சாம்பல் புதன் பிரார்த்தனை

நாகர்கோவில், பிப்.18: கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் மாதம் 4 ம் தேதி வருகிறது. ஏப்ரல் 2ம் தேதி புனித வெள்ளி ஆகும். இந்த பண்டிகைக்கு முன் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். அதன்படி நேற்று (17ம் தேதி) கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது.

இதையொட்டி தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் பிஷப் நசரேன் சூசை சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு பிரார்த்தனை நடத்தினார்.  இதற்கான சாம்பல் கடந்த ஆண்டு நடந்த தவக்கால குருத்தோலை பவனியின்போது வழங்கப்பட்ட குருத்து ஓலைகளை சேகரித்து எரித்து சாம்பல் தயாரிப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து ெகாண்டனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. தவக்காலத்தையொட்டி தினந்தோறும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகளில் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடும் நடைபெறும். ஏழைகளின் பசி, பிணி போக்கும் வகையில் கஞ்சி காய்ச்சி கொடுத்தல், அவர்களை வீடுகளுக்கு அழைத்து வந்து உணவு, உடை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். கிறிஸ்தவர்களின் வீடுகளில் தவக்காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது.

Related Stories: