சென்னை: போடி தொகுதியில் ஓபிஎஸ்சுக்கும், ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியனும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கமும், பாப்பிரெட்டிப்பட்டியில் பழனியப்பனும், பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலமும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் 5 பேரும் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்கள். இவர்களில் பழனியப்பன், அதிமுகவில் இருந்து, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், டிடிவி.தினகரன் அணியில் அமமுகவில் செயல்பட்டார். பின்னர் கடந்த 2021ம் ஆண்டு அமமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் எம்எல்ஏவாக வென்றார். கடந்த 2021ம் ஆண்டு வெங்கடாசலத்திற்கு சீட் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஓபிஎஸ் உள்ளிட்டோர் அண்மையில் திமுகவில் இணைந்தனர். இவர்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தனி அணியாக செயல்பட்டு வந்த நிலையில் திமுகவில் இணைந்தனர். இவர்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துடன் திமுகவில் இணைந்த உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பனுக்கு சீட் வழங்கப்படவில்லை.
* 4 மேயர்களுக்கு எம்எல்ஏ சீட்
திருப்பூர் மேயர் தினேஷ்குமாருக்கு திருப்பூர் தெற்கு தொகுதியும், தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதனுக்கு தஞ்சாவூர் தொகுதியும், நாகர்கோவில் மேயர் மகேஷூக்கு கன்னியாகுமரி தொகுதியும், ஓசூர் மேயர் சத்யாவுக்கு ஓசூர் தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.
