பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்-அவரது மகன் அன்புமணி இடையே தொடரும் மோதல், மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அன்புமணியை பொறுத்தவரை நான்தான் உண்மையான பாமக என்று கூறி, அதிமுக-பாஜவுடன் கூட்டணி வைத்து 18 தொகுதிகளை ெபற்றுள்ளார். சசிகலா ஆரம்பித்த அஇபுதமமுக கட்சியுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். ராமதாசை பொறுத்தவரை ஒரு காலத்தில் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்த ஜி.கே.மணி (தற்போது கவுரவ தலைவர்) இன்றுவரை அவருடன் விசுவாசத்தோடு பயணித்து வருகிறார்.
பாமகவில் மாநில இளைஞரணி தலைவராக அவரது மகன் தமிழ்குமரன் பொறுப்பு வகித்தார். அன்புமணியின் நிர்ப்பந்தம் காரணமாக ராமதாஸ், அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்கினார். கட்சியை அன்புமணி உடைத்த நிலையில் தனது அணிக்கான பாமக மாநில இளைஞரணி தலைவர் பொறுப்பை மீண்டும் தமிழ்குமரனுக்கு ராமதாஸ் வழங்கினார். இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்துள்ளார் தமிழ்குமரன். டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் ஜி.கே.தமிழ்குமரன் இணைந்தார்.
அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இவருக்கு பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு புறமிருக்க, தமிழ்குமரன் காங்கிரசில் இணைந்தது ஏன்? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. தந்தை ஜி.கே.மணி வழியில் தமிழ்குமரன் நீண்டகாலமாக பாமகவில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். அன்புமணி கட்சியை உடைத்த நிலையில், ராமதாஸ் அவ்வப்போது எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகள், கூட்டணி மாற்றங்கள் போன்றவற்றில் அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை.
ராமதாஸ் பாமக அணியில் இருந்து தமிழ்குமரன் விலகுவதற்கு இது ஒரு முக்கிய காரணம். சமீப ஆண்டுகளாக கட்சியை விட, திரைப்பட தயாரிப்பு சார்ந்த தனது தொழிலில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார். அன்புமணி தந்தையை நோகடித்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாசின் பக்கம் நின்று பணியாற்ற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால் ராமதாசின் அரசியல் நகர்வுகள், தமிழ்குமரன் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. இதேபோல் மதச்சார்பற்ற கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர் தமிழ்குமரன். தேசிய அளவில் காங்கிரசின் செயல்பாடுகள் அவருக்குப் பிடித்திருந்ததும் அவர் கட்சி மாற ஒரு உந்துதலாக அமைந்தது.
ராகுல் காந்தியின் நடைபயணம் மற்றும் அவரது அரசியல் அணுகுமுறை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், தற்போதைய சூழலில் நாட்டிற்குத் தேவையான அரசியலை காங்கிரஸ் முன்னெடுப்பதாக அவர் நம்புவதாகவும் கூறியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை பாமக வலுவான நிலையில் இருந்தாலும், அங்குள்ள இளம் தலைமுறையினர் மற்றும் பிற சமூகத்தினரிடையே காங்கிரஸைக் கொண்டு செல்வதற்கு உரிய பிரதிநிதிகள் இல்லை. இதற்கு சரியான நபராக தமிழ்குமரன் இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மேலிடத்தில் தெரிவித்து, அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையேற்று அவர் காங்கிரசில் இணைந்துள்ளார் என்று கூறுகின்றனர் தர்மபுரியில் உள்ள தமிழ்குமரனின் ஆதரவாளர்கள். 2010ம் ஆண்டு பென்னாகரம் இடைத்தேர்தலில் பாமக சார்பில் தமிழ்குமரன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அவரது தந்தை ஜி.கே.மணி வெற்றிபெற்றார். இந்தநிலையில் திமுக தலைமையிலான காங்கிரஸ் வேட்பாளராக பென்னாகரம் தொகுதியில் மீண்டும் களமிறங்க முடிவு செய்துள்ளார் தமிழ்குமரன். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிருநாளில் வெளியாகும் என்பதும் அவரது ஆதரவாளர்களின் நம்பிக்கை.
* சினிமாவிலும் ஆதிக்கம்
ஜி.கே.தமிழ்குமரன், தற்போது லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். ‘பொன்னியின் செல்வன்’, ‘இந்தியன் 2’, ‘வேட்டையன்’ போன்ற பிரம்மாண்ட படங்களின் தயாரிப்பு நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். 2013ம் ஆண்டு வெளியான ‘என்றென்றும் புன்னகை’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். ஜோதிகா நடித்த ‘நாச்சியார்’ திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 2026ல் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், ‘நலம் காக்கும் அணி’ சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.
