சென்னை: பெரம்பூரில் பரப்புரை செய்ய தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து விஜய் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தலைமைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர், ஏடிஜிபி, நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்றும் அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பரப்புரை செய்ய தனக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கான 10 காரணங்களையும் அவர் மனுவில் பட்டியலிட்டுள்ளார்.
அந்த புகார் மனுவை இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கும் அனுப்பியுள்ளனர். குறிப்பாக, த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் பரப்புரை செய்ய அனுமதி கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தனர். அந்த விண்ணப்பத்தில் 3 ஆயிரம் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தேர்தல் நடத்தும் அதிகாரி கீதா மற்றும் போலீசார் பரிசீலித்தனர். அப்போது த.வெ.க கட்சியினர் அனுமதி கேட்டு உள்ள இடத்தில் 200ல் இருந்து 300 பேர் மட்டுமே கூட முடியும் என போலீஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கீதா, தவெகவினர் கேட்ட இடத்தில் 3 ஆயிரம் பேர் நிற்க போதிய இடவசதி இல்லை.
கூட்டம் கூடினால் நெரிசல் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரப்புரைக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தார். மேலும் வேறு இடத்தை தேர்வு செய்து கூறுங்கள். அதற்கு அனுமதி வழங்குகிறோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு விஜய் நேற்று கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியதாவது; தலைவரின் பல்வேறு நிகழ்ச்சிகள் தடைபட்டுள்ளது. வேட்பாளர்களை அறிமுகம் செய்ய வேண்டிய நிகழ்ச்சி தடைபட்டது.
சுற்றுப்பயணம் மேற்கொள்ள 5 இடங்களில் விதிகளுக்கு உட்பட்டு 48 மணி நேரத்திற்கு முன்பு ஆன்லைன் மூலம் அனுமதி கோரினோம். ஆனால், அனுமதி கொடுப்பதாக வரச்சொல்லி, இங்கு குழி தோண்டப்பட்டுள்ளது, அதனால் நிகழ்ச்சி நடத்த அனுமதியில்லை என மறுத்துள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாநகராட்சி ஆணையரின் கட்டளைகளை ஏற்றுத்தான் பணிகள் நடக்கின்றன. தமிழக காவல்துறை இயக்குநர், கமிஷனர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் அனைவரும் இணைந்து எங்களது சுற்றுப்பயணத்தை முடக்க வேண்டும் என்று கருதி, நாள்தோறும் எங்களுக்கு பல்வேறு இடர்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில், இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலமாக இருக்கும் அதிகாரிகள் இன்னும் மாற்றப்படவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. எங்களது பணிகள் முடக்கப்படுகின்றன, அதற்கு உயர் அதிகாரிகள் தான் காரணம். எனவே அந்த உயரதிகாரிகளை மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களது முக்கிய கோரிக்கை. பரப்புரைக்கு அனுமதி கிடைத்த அடுத்த நிமிடமே களத்திற்குச் செல்ல தயாராக இருக்கிறோம். அனுமதி கிடைத்தால் இன்றைக்கே போகலாம் என்று தலைவர் கூறினார். ஆனால் அனுமதி தருவதற்கு தடையாக இருப்பதால் தான் இந்த மனுவை தந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
