தமிழகம் முழுவதும் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இம்முறை ஏராளமான புதுமுகங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி (தனி) தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக 26 வயதான (20.3.1998) டாக்டர் கோகிலா மணி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சேவூர் ஒன்றிய மருத்துவரணி துணை அமைப்பாளர். இவரது தந்தை பெயர் வெங்கிட்டான். இவர் அவிநாசி வட்டம், குட்டகம் ஊராட்சி கிளை செயலாளர். கோகிலா மணி சொந்த ஊர் அவிநாசி திருமலைக்கவுண்டன்பாளையம் ஆகும். கோகிலாமணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மருத்துவ படிப்பை முடித்து மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் பட்டியலினத்தை சேர்ந்த சமையலர் பாப்பாள் சமைத்த மதிய உணவை பிற சமுதாயத்தை சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது என அவர்களது பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் தீண்டாமை செயலில் ஈடுபட்ட சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்து அதே சமூகத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் மருத்துவரை திமுக வேட்பாளராக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அளவில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இளம்பெண் வேட்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணியில் பாஜ சார்பில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகனை எதிர்த்து களம் காண்கிறார்.
