மதுரை மத்திய தொகுதியில் கடந்த 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், அதிமுக சார்பில் ஜெயபால் போட்டியிட்டனர். இதில், பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 2021ல் நடந்த தேர்தலில் பிடிஆரை எதிர்த்து பசும்பொன் தேசிய கழக தலைவர் ஜோதி முத்துராமலிங்கம் போட்டியிட்டார். இத்தேர்தலில் பிடிஆர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதுடன், அமைச்சரும் ஆனார். இதையடுத்து, இந்த முறை மதுரை மத்திய தொகுதியில் கட்டாயம் போட்டியிட முடிவு செய்து அதிமுகவினர் பலர் தீவிரமாக வேலை பார்த்து வந்தனர். மாஜி அமைச்சர்கள் உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ மூலம் காய் நகர்த்தி வந்தனர்.
அதே நேரம் மதுரை மத்திய தொகுதியை குறிவைத்து அமமுகவினரும், பாஜவினரும் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த 3 கட்சிகளும் ஒரே கூட்டணியான நிலையில் இவர்களில் யாருக்கு மதுரை மத்திய தொகுதி என்ற நிலை உருவானது. இந்த தொகுதியை கைப்பற்றுவதில் அமமுகவினர் ரொம்பவே தீவிரமாக இருந்தனர். அதிமுக – பாஜ கூட்டணியில் டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், அமமுக சார்பில் தென் மாவட்டங்களிலுள்ள பெரியகுளம், மதுரை மத்தி, காரைக்குடி ஆகிய தொகுதிகள் இருக்கும் என அமமுகவினர் உறுதியாக எதிர்பார்த்தனர்.
இதில், மதுரை மத்திய தொகுதி மட்டும் கிடைக்கவில்லை. இதனால் அமமுகவினர் மிகுந்த வருத்தமடைந்தனர். அமுமுகவிற்கான பட்டியலில் மதுரை மத்திய தொகுதி இல்லாததால் அதிமுகவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த முறை எப்படியும் அதிமுகவிற்கு தான் சீட் என இருந்தனர். கட்சியினர் சிலர் சீட்டை கைப்பற்றும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கினர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் எடப்பாடி பழனிசாமி, மதுரை மத்திய தொகுதியை கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கீடு செய்து அறிவித்தார்.
அக்கட்சியின் வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி போட்டியிடுவார் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். இந்த பகுதியில் அவ்வளவாக யாருக்கும் தெரியாத ஒரு கட்சிக்கு, அதுவும் சென்னையில் வசிப்பவருக்கு சீட் ஒதுக்கியது அதிமுகவினரை சொல்ல முடியாத துயரத்திற்கு அழைத்து சென்றுள்ளது. பூத் கமிட்டி அமைப்பதற்கு கூட போதிய ஆட்கள் இல்லாத கட்சிக்கு இங்கு சீட் கொடுத்துள்ளது அதிர்ச்சியை மட்டுமின்றி அதிருப்தியையும் அதிமுகவினருக்கு கொடுத்துள்ளது.
தொகுதி அதிமுகவினர் கூறுகையில், ‘‘கடந்த தேர்தலிலும் திடீரென பசும்பொன் தேசிய கழகத்திற்கு மதுரை மத்திய தொகுதியை ஒதுக்கீடு செய்தனர். தற்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கீடு செய்திருப்பது அதிமுகவினருக்கு துயரத்தையே தந்துள்ளது. மதுரையில் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் அதிமுக, பாஜ மற்றும் அமமுகவினர் இடையே ஒத்துப்போகாத நிலையில் நான்காவதாக ஒரு தரப்பு உள்ளே புகுந்திருப்பதால் அதிமுகவினர் ஏமாற்றமடைந்துள்ளனர். உள்ளூர் அதிமுகவினர் பலர் இருக்கும்போது, குஷ்புவின் கணவருக்கு முக்கியம் தந்ததை நாங்கள் விரும்பவில்லை. எங்களது குமுறல்களை தலைமைக்கும் வெளிப்படுத்தி உள்ளோம்’’ என்றனர்.
* சுந்தர்.சி-க்கு சீட் கொடுத்தது ஏன்?
மதுரை மத்திய தொகுதிக்கான புதிய நீதிக் கட்சி வேட்பாளராக, திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி, போட்டியிடுவார் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். மதுரை மத்திய தொகுதியில் பிள்ளைமார் மற்றும் முதலியார் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவிற்கு உள்ளதாலும், பிராமணர்களின் வாக்கு கணிசமாக உள்ளதாலும், அதிமுக மற்றும் பாஜ ஆதரவு இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கணிப்பில் ஏ.சி.சண்முகம் மதுரை மத்திய தொகுதியை தேர்வு செய்துள்ளதாகவும், பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த இயக்குநர் சுந்தர்.சி, ஏற்கனவே பிரபலம் என்பதாலும், இரட்டை இலை சின்னத்தில் அவரை நிறுத்தினால் சுலபமாக வெற்றி பெறலாம் என்ற நினைப்பில் ஏ.சி.சண்முகம், சுந்தர்.சியை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். இதற்கு முன்னோட்டமாக கப்பலூர் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியின் 140 அடி உயர சிலை அமைப்பதற்காக கடந்த மாதம் மதுரை வண்டியூர் பகுதியில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் இயக்குநர் சுந்தர்.சி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
