பத்மநாபபுரத்தில் மீண்டும் ‘சிவப்பு சூரியன்’

தமிழக அரசியலில் ‘திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரம்’ என அழைக்கப்படும் பத்மநாபபுரம் தொகுதி, இப்போது ஒரு பிரம்மாண்டமான கொள்கை யுத்தத்திற்குத் தயாராகிவிட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலில், இத்தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாஜ ஆகிய இரு தேசிய துருவங்கள் நேருக்கு நேர் மோதுவது உறுதியாகியுள்ளது. திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு மத்தியில், உழைக்கும் வர்க்கத்தின் ‘சிவப்புக் கொடி’ மீண்டும் தனது பழைய கோட்டையை மீட்டெடுக்கப் பாயும் வேகம், ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் பத்மநாபபுரம் பக்கம் திருப்பியுள்ளது.

* திருவட்டார் டூ பத்மநாபபுரம்: ஒரு சிவப்புக் கோட்டையின் கதை!
மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த எழுச்சிக்குப் பின்னால் அரை நூற்றாண்டு கால உழைப்பு ஒளிந்துள்ளது. ஒரு காலத்தில், குமரி மாவட்டத்தின் ‘சிவப்புக் கோட்டை’ என்று அழைக்கப்பட்ட திருவட்டார் தொகுதியின் நீட்சியாகவே இன்றைய பத்மநாபபுரம் பார்க்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் இணையற்ற தலைவரான ஜே.ஹேமச்சந்திரன், இங்கிருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் சட்டமன்றத்தில் தொழிலாளர்களுக்காக எழுப்பிய குரல் இன்றும் இந்த மண்ணின் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

* லீமாரோஸின் கடைசி முத்திரை
2006-ல் திருவட்டார் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட லீமாரோஸ் வெற்றி பெற்றார். அதுவே இந்த மண்ணில் இடதுசாரிகள் பதிவு செய்த கடைசி வெற்றி. தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு திருவட்டாரின் பெரும்பகுதிகள் பத்மநாபபுரத்துடன் இணைக்கப்பட்டன. அத்துடன் தொகுதியும் நீக்கப்பட்டது. ஆனால், கடந்த பல தேர்தல்களாக கூட்டணி இட ஒதுக்கீட்டால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. 20 ஆண்டுகாலக் காத்திருப்பிற்குப் பிறகு, பத்மநாபபுரம் தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சி இம்முறை தங்களது பிடிவாதமான கோரிக்கையாக முன்வைத்து கூட்டணியில் பெற்றுள்ளது. இத்தொகுதிக்கு உட்பட்ட அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள், முந்திரித் தோட்டத் தொழிலாளர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் முதுகெலும்பாக உள்ளனர். சிஐடியு தொழிற்சங்கத்தின் வலிமையான கட்டமைப்பு, கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களின் வாக்குகள் இம்முறை ‘சிவப்புச் சூரியனை’ மீண்டும் பிரகாசிக்கச் செய்யும் என மார்க்சிஸ்ட் கட்சி நம்புகிறது.

* பாஜவின் சவால்: நேரடி மோதல்
மறுபுறம், பத்மநாபபுரம் தொகுதியைத் தனது ‘இந்துத்துவ’ மற்றும் ‘வளர்ச்சி’ அரசியலின் தளமாக மாற்ற பாஜ துடிக்கிறது. திராவிடக் கட்சிகளின் தலையீடு இன்றி, நேரடியாக ஒரு கம்யூனிஸ்ட் வேட்பாளரை எதிர்கொள்வதை பாஜ ஒரு கௌரவப் பிரச்னையாகப் பார்க்கிறது. உழைக்கும் வர்க்கத்தின் தோழனாக மார்க்சிஸ்ட் களம் காண, தேசியவாதத்தையும் இந்துத்துவத்தையும் முன்வைத்து பாஜ காய்களை நகர்த்துகிறது. இதனால் பத்மநாபபுரம் தொகுதி, இந்தியாவின் இரு பெரும் எதிர் எதிர் கொள்கைகள் மோதும் ‘மினி போர்க்களமாக’ மாறியுள்ளது.

வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் காரணிகள்: 2006ல் லீமாரோஸ் காட்டிய அந்த மேஜிக்கை, 2026ல் மீண்டும் நிகழ்த்திக் காட்ட மார்க்சிஸ்ட் தொண்டர்கள் வீடு வீடாகப் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். பாரம்பரிய கம்யூனிச வாக்கு வங்கியைத் தாண்டி, புதிய தலைமுறை இளைஞர்களைக் கவர மார்க்சிஸ்ட் கட்சி புதிய முகங்களை முன்னிறுத்தத் திட்டமிட்டுள்ளது. ஒருவேளை மீண்டும் லீமாரோஸ் அல்லது செல்லசுவாமிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று பேச்சு எழுந்துள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் வாக்குகள் சிதறாமல் சிவப்புக் கொடிக்கு விழுந்தால், பத்மநாபபுரத்தில் மீண்டும் ஒரு இடதுசாரி எம்.எல்.ஏ உருவாவது உறுதி என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ‘எங்கள் மண்ணை மீண்டும் எங்களிடமே ஒப்படையுங்கள்’ என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கட்சி களமிறங்கியுள்ளது. திருவட்டாரில் லீமாரோஸ் விதைத்த அந்த வெற்றியை, பத்மநாபபுரத்தில் அறுவடை செய்யக் காத்திருக்கிறது ‘சிவப்புச் சூரியன்’. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொகுதி மீண்டும் ஒரு கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினரைச் சந்திக்குமா என்பதை அறிய மே 4ம் தேதி வரை காத்திருப்போம்!

* அண்ணன்-தம்பி ‘ஹாட்ரிக் டிஷ்யூம்’
கடந்த 2019ம் ஆண்டு இடைத்தேர்தல் மற்றும் அதனையடுத்து வந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்த இரண்டு களங்களிலும் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதி ஒரு ‘சுவாரஸ்யமான போரை’ கண்டது. திமுக சார்பில் மகாராஜன் களம் இறங்க, அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அவரது தம்பி லோகிராஜன் போட்டியிட்டார். ரத்தச் சொந்தங்கள் இருவேறு துருவங்களாக மோதிக்கொண்ட இந்த சகோதர யுத்தத்தில், இரண்டு முறையும் அண்ணன் மகாராஜனே (திமுக) வெற்றி வாகை சூடி தொகுதியைத் தன் வசப்படுத்தினார். தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும், அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக மீண்டும் லோகிராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த தோல்விகளுக்குப் பதிலடி கொடுத்து, இந்த முறை தொகுதியை மீட்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவினர் களப்பணியைத் தொடங்கியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க நேற்று திமுக தரப்பில் ஆண்டிபட்டியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் மகாராஜனுக்கு மீண்டும் தேர்தலில் களமிறங்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள், தொகுதியில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கடந்த 2 வெற்றிகள் தந்த பலம் ஆகியவை அண்ணன் மகாராஜனுக்கு மீண்டும் ஒருமுறை வெற்றியைத் தேடித்தரும் என திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், 3வது முறையாக அண்ணன் – தம்பி மோதலை சந்திக்க ஆண்டிபட்டி தொகுதியும் தயாராக உள்ளது.

Related Stories: