வினை விதைத்தவன் வினை அறுப்பான்… பாஜவுடன் சேர்ந்து அதிமுக மாஜியும் உள்குத்து

திண்டுக்கல் மாவட்டம், பழநி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 2021 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த ரவி மனோகரன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு பழநி தொகுதி அதிமுக வேட்பாளர் ரேஸில் முன்னணியில் இருந்த வேணுகோபாலுவை துக்கமடைய செய்துள்ளது. அதிமுகவின் மாவட்ட பொருளாளராக இருக்கும் வேணுகோபாலு, ‘‘முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி’’ என்றும், ‘‘வினை விதைத்தவன், வினை அறுப்பான்’’ என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது தற்போது பழநி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அதிமுக உள்ளூர் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘அதிமுகவின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொருளாளராக இருப்பவர் வேணுகோபாலு. முன்னாள் எம்பி சேனாபதி கவுண்டரின் மகனான இவர் 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏவானார். அதன்பின்பு 2016, 2021 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் பழநி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிமுக தலைமையை அணுகி வந்தார். ஆனால் கிடைக்கவில்லை. ஆனால் இம்முறை வேணுகோபாலுக்கே சீட் கிடைக்குமென பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ குப்புச்சாமியின் மகனும், கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தவருமான ரவி மனோகரன் மாவட்ட பொறுப்பாளர்களின் ‘பார்வை’ தன்மேல் விழும்படி கடைசி நேரத்தில் நடந்து கொண்டதன் பயனாக சீட் கிடைத்ததாக கூறி, வேணுகோபாலு விரக்தியடைந்து வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்’’ என்றனர். ஏற்கனவே, கூட்டணி கட்சியான பாஜ தங்களுக்கு பழநியை ஒதுக்க வலியுறுத்தி தேங்காய் உடைப்புப் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், அதிமுகவின் சக கட்சி நிர்வாகிகளும் போர்க்கொடி தூக்கி இருப்பது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

* 37 ஆண்டுகளுக்கு பின் அம்பையில் ‘கை’
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டி இயற்கை எழில் சூழ்ந்த தொகுதியாக அம்பை சட்டமன்ற தொகுதியில் இதுவரை 16 முறை தேர்தல் நடந்து உள்ளது. இதில் 5 முறை காங்கிரஸ், 6 முறை அதிமுக, திமுக 2, மார்க்சிஸ்ட் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. 1 முறை சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தினருக்கு அடுத்தப்படியாக நாடார், யாதவர், தேவேந்திரகுல வேளாளர், முதலியார், சேனை தலைவர் என அனைத்து சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர். அம்பை தொகுதியில் கடந்த 1989ல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது.

அப்போது அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக பிளவுபட்டு வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ரவி அருணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு காங்கிரசிற்கு இத்தொகுதி ஒதுக்கப்படாததால் திமுக, அதிமுக மாறி, மாறி வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் 37 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் ஏற்கனவே அதிமுக சார்பில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: