சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று இறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஓரிரு நாளில் வெளியிட கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ம்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த தொகுதிகள் என்பதை கூட்டணிக்கு தலைமையான திமுக அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து, காங்கிரசுக்கான 28 தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வை அகில இந்திய காங்கிரஸ் தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது வெளியாகியதால், அங்குள்ள முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் வாய்ப்பு கேட்டு டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தங்களுக்கு தெரிந்த மூத்த தலைவர்கள் மூலம் வாய்ப்பு கேட்டு கட்சி தலைமைக்கு அழுத்தம் ெகாடுத்து வருகின்றனர். இதை தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்வுக் குழு கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில் சில தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். ஒரு தொகுதிக்கு 3 பேர் கொண்ட பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து ஒருவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் மத்திய தேர்வுக் குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் இன்று டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
