திருமலையில் காஸ் தட்டுபாடு; 50 ஓட்டல்கள் மூடப்பட்டதால் அன்னப்பிரசாத மையத்தில் திரளும் பக்தர்கள்: தட்டுப்பாடின்றி பிரசாதம் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு

 

திருமலை: திருமலையில் காஸ் தட்டுபாடு காரணமாக 50 ஓட்டல்கள் மூடப்பட்டதால் உணவிற்காக தேவஸ்தான அன்னப்பிரசாத மையத்தில் பக்தர்கள் திரளுகின்றனர். தட்டுப்பாடின்றி பிரசாதங்கள் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. மேற்கு ஆசிய போரின் காரணத்தால், காஸ் பற்றாக்குறையால் திருமலையில் 50க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், துரித உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். தற்போது போரின் காரணமாக வணிக காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிவாயு பற்றாக்குறையால் ஓட்டல்கள், துரித உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால், ஏராளமான பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் அன்னபிரசாதத்தையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. மேலும், பக்தர்களின் கூட்டத்தை உணர்ந்து, தேவஸ்தானமும் அன்னபிரசாதம் தயாரிப்பை அதிகரித்துள்ளது. பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். திருமலையில் உள்ள மாத்ரு தாரிகொண்ட வெங்கமாம்பா நித்ய அன்னபிரசாத மையத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

திருமலையில் பல்வேறு இடங்களில் சிறப்பு கவுண்டர் மூலம் அன்ன பிரசாதத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியிலும் பக்தர்கள் அதிக அளவில் அன்னப்பிரசாதம் பெற்று செல்கின்றனர். போர் சூழலில் நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை இருப்பினும், தேவஸ்தானத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல் எரிவாயு சப்ளை செய்ய எண்ணெய் நிறுவனம் முன்வந்துள்ளது. எனவே பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் லட்டு மற்றும் அனைத்து வகையான பிரசாதங்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

திருமலையில் சேகரிக்கப்படும் உணவு பொருட்கள், காய்கறி கழிவுகள், தோட்டம் சார்ந்த கழிவுகள் கொண்டு விரைவில் இயற்கை எரிவாயு உற்பத்தி மையம் பயன்பாட்டிற்கு வரும் என்பதால், அதன் உற்பத்தி தொடங்கினால் எரிவாயு பெறுவதில் தேவஸ்தானத்திற்கு எப்போதும் பிரச்னை இருக்காது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: