சேலம், மார்ச் 23: சேலத்தில் மகன் கிணற்றில் விழுந்து இறந்தது தெரியாமல். தேடி சென்ற மீன் வியாபாரி மாயமானது குறித்து தாய் போலீசில் புகார் செய்துள்ளார். சேலம் ஜாகீர் சின்னம்மாபாளையம் வீரபாண்டி நகரைச் சேர்ந்தவர் முனுசாமி (35). இவர் அருகில் உள்ள மீன் மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் கிஷோர் ராஜ் (6). அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம், வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் மீன் பிடிப்பதாக கூறி சென்றுள்ளான். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் முனுசாமி அவரது தாய் தமிழரசியிடம் ‘மகனை தேடிப்பார்த்து வருவதாக கூறி’ டூவீலரில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறுவன் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் நேற்று மாலை சடலமாக மிதந்தான். போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், இதுகுறித்து சிறுவனின் தந்தை முனுசாமியிடம் தகவல் தெரிவிக்க செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பேரன் இறந்த நிலையில் மகன் மாயமானதால், மூதாட்டி தமிழரசி இதுபற்றி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
