இடைப்பாடி, மார்ச் 23: இடைப்பாடி அருகே பூலாம்பட்டி ரிங்ரோடு அருகே, கனிம வளத்துறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் கோபி ஆகியோர், வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், குஞ்சாம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில் (29) என்பவரது லாரியில், உரிமமின்றி மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் தப்பியோடி விட்டார். பின்னர், லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், இடைப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதே போல், குள்ளம்பட்டி பகுதியிலும், உரிய அனுமதி இல்லாமல் மண் கடத்தி வந்த டாரஸ் லாரியை கனிமவளத்துறை அதிகாரிகள் பிடித்து, தேவூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
