செம்மை மிக்க வாழ்விற்கு ராமநாமம்

நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள்

கிருஷ்ணாவதாரத்தில் நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள். ராமாவதாரத்தில் ஒருவர் தவம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார் என்று சுவாரஸ்யமாகச் சொல்லுவார்கள். யசோதை, நந்தகோபன், தேவகி, வசுதேவர் ஆகிய நால்வர் தவம்செய்து கண்ணன் அவதரித்தான். ஆனால் தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

நான்கு வகை தர்மங்கள்

தர்மத்தை காப்பதற்காக பகவானே தசரதனுக்குப் பிள்ளைகளாக அவதரித்தான். தர்மம் நான்கு வகைப்படும்.
1. சாமானிய தர்மம்,
2. சேஷ தர்மம்,
3. விசேஷ தர்மம்,
4. விசேஷதர தர்மம்.
இதில் தாய் தந்தையிடமும் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற தர்மம் “சாமான்ய தர்மம்”. இதை ராமன் அனுஷ்டித்துக் காட்டினான்.
இரண்டாவதாக, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்கின்ற தொண்டுள்ளம் கொண்டவனாக, பதினான்கு ஆண்டுகள் தூங்காமல் (துஞ்சமில் நயனத்தான்) பகவானுக்குக் குற்றேவல் புரிந்தான் இலக்குவன். இது “சேஷ தர்மம்”.
எப்பொழுதும் பகவானையே நினைத்துக் கொண்டு, பகவான் சொல்லியதை செய்தான் பரதன். இது “விசேஷ தர்மம்”.
இறைவனுக்குத் தொண்டு செய்வதை விட இறை அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முதன்மையானது என்று பாகவத சேஷத்வத்தைக் காட்டினான் சத்ருக்கனன். இது “விசேஷதர” தர்மம்.
இது சைவத்திலும் உண்டு. ‘‘கூடும் அன்பினில் கும்பிட அன்றி வீடும் வேண்டா’’ என்று இருக்கும் நிலை அது. ‘‘உற்றதும் உன் அடியார்க்கு அடிமை’’ என்று இதை திருமங்கை ஆழ்வார் வலியுறுத்துவார்.

ராமாயணம் கதையா? தத்துவமா?

அறத்தின் நாயகனான ராமன் குணங்கள்தான் ராமாயணம் முழுக்க இருக்கிறது. அந்தப் பரம்பொருளை உணர்வதுதான் ராமாயணம் தெரிந்து கொள்வதன் நோக்கம். எனவே ராமாயணத்தை ஒரு கதையாகப் படிக்காமல், தத்துவத்தைப் படிப்பதன் மூலம்தான் முழுமையான பலன் பெற முடியும். அதனால்தான் நம்மாழ்வார், ‘‘கற்பார் ராமாயணத்தை அல்லால் மற்றும் கற்பரோ’’ என்று சொல்லாமல், ‘‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ’’ என்று பாடினார்.

காயத்ரி மந்திரமும், ஸ்ரீ ராமாயணமும்

சகல வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரத்திற்கும், ஸ்ரீ ராமாயணத் திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்கள். ராமாயணத்திற்கு 24,000 ஸ்லோகங்கள். ஒவ்வொரு அட்சரத்துக்கு 1000 ஸ்லோகங்கள் என்ற வகையில் 24 ஆயிரம் ஸ்லோகங்களை வான்மீகி செய்தார். இதைப்போலவே, நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், ராமாயணசாரத்தைச் சொல்வதால், அதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை ராமாயணத்திற்கு நிகராக 24000 படி உரை எழுதினார்.

ராமாயணமும் மகாபாரதமும்

ராமாயணம் மகாபாரதம் இரண்டும் ஒரே கருத்தைத்தான் சொல்லுகின்றன. உலக சகோதரத்துவத்தின் ஒற்றுமையைச் சொல்வது ராமாயணம். ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையின்றி பகைத்துக் கொண்டால் என்ன மாதிரியான அழிவுகள் ஏற்படும் என்பதைச் சொல்வது மகாபாரதம். ராமாயணம் நேர்மறையாகச் சொல்கிறது. அதே கருத்தை எதிர்மறையாகச் சொல்லு கின்றது மகாபாரதம். அதனால்தான் “இதிகாசங்களில் சிரேஷ்டமானது ராமாயணம்” என்று பிள்ளை லோகாச்சாரியார் தம்முடைய ஸ்ரீ வசனபூஷணம் என்கின்ற நூலிலே சொல்லி வைத்தார்.

சீதையின் பெருமையா? ராமனின் பெருமையா?

ஸ்ரீ ராமாயணம் என்பது ராமரின் பெருமையைக் கூறுவதாகச் சொன்னாலும், அது சீதையின் பெருமையை பிரதானமாகச் சொல்ல ஏற்பட்ட காவியம் என்று மகரிஷிகள் கருதுகின்றார்கள். “ஸீதாயாம் சரிதம் மகத்” (சீதையின் பெருங்கதை) என்றுதான் ரிஷிகள் சொல்லுகின்றார்கள். ஆழ்வாரும் தேவ மாதர்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக சீதை பத்து மாதம் சிறையில் இருந்தாள். அந்த சிறை இருந்தவளின் பெருமையைச் சொல்றதுதான் ராமாயணம் என்று பாசுரம் பாடுகின்றார்.
“தளிர்நிறத்தால் குறையில்லாத் “தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள்” காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே’’
– என்பது திருவாய்மொழி.
தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே, அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல் என்பது உரையாசிரியர்கள் கருத்து.

முத்தி நகரங்களில் தலை அயோத்தி

ஸ்ரீ ராமர், முத்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான அயோத்தியில் அவதரித்தார். எனவே அயோத்தியையும் ஸ்ரீ ராமரையும் நினைத்தாலே புண்ணியம் வரும். முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் முதல் க்ஷேத்திரம் இது. முக்கியமான க்ஷேத்திரமும்கூட.
‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரி த்வாரவ திஶ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’
என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

அயோத்தி ஏன் புனிதத் தலம்?

பகவான் நித்ய வாசம் செய்யும் வைகுண்டத்தின் ஒரு பகுதியே அயோத்தி. (யுத்தங்களால் வெல்லப்படாத பூமி). மனு, இந்த ஊரை சரையூ நதியின் தென் கரையில் நிறுவினார், என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது. அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும், அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும், மேற்கில் வக்த்ரனும், வடக்கில் வீபீஷணனும் வாழ்ந்துகொண்டு இந்த நகரத்தை காப்பாற்றி வருகிறார்கள் என்று ஐதீகம். ஸ்ரீ ராமபிரான் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களின் அடிச்சுவடுகளை இன்றும் நாம் அயோத்தியில் தரிசிக்க முடியும். அதனால் அயோத்தியை புனிதத் தலமாக இந்திய மக்கள் கருதுகிறார்கள். அயோத்தியில் தரிசிக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. அயோத்தியா ரயில்வே நிலையத்தினுள், சுவர்களில் `ஸ்ரீ ராம்சரித் மானஸ்’ என்ற துளசிதாஸ் ராமாயணத் திலிருக்கும் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

சரயு நதி

குழந்தைக்கு அமுதம் தரும் தாயின் மார்பகம் போல, உயிர்களுக்கு அமுதம் தரும் வற்றாத நதி சரயு.
`இரவி தன்குலத் தெண்ணிபல வேந்தர்தம்
புரவு நல்லொழுக் கின்படி பூண்டது
சரயு வென்பது தாய் முலையன்ன திவ்
வரவு நீர்நிலத்தோங்கு முயிர்க்கெல்லாம்’
(பால-ஆற்றுப்படலம்-24)
– என்று நதியின் பெருமையை கம்பன்
வர்ணிப்பான்.

சரயு நதி அயோத்தியில் அற்புதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சரயு நதியின் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிறது. அதன் பெயர் ஹரிருத் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சரயு நதியுடன் இரண்டு நதிகள் கலக்கின்றன. கர்னால் மற்றும் மகாகாளி என்பவை அவை. ராமரின் அவதாரதினமான இராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கி நீராடுகிறார்கள். ராம்காட் என்னு மிடத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம். ராமர் இந்த உலக வாழ்வை முடித்துத் கொள்ளத் தீர்மானித்த போது, இந்த நதியில்தான் இறங்கினார் என நம்பப்படுகிறது. இந்த இடம் குப்த காட் என்று அழைக்கப்படுகிறது.

ஏன் ராம அவதாரம்?

ராமபிரான் தமது உலகமான வைகுண்டத்துக்குச் செல்லுகின்ற போது எல்லோரையும் அழைத்துச் சென்றார் என்று நம்மாழ்வார் பாடுகிறார். வைகுண்டம் என்பது மேலேறுவது. மேல் நிலைக்குச் செல்வது. இதை வள்ளுவரும் “வானோர்க்கும் உயர்ந்த உலகம்” என்று சொல்லுவார். எல்லோரையும் உயரே ஏற்ற, கீழே இறங்க வேண்டும். கீழே இறங்குதல்தான் “அவதாரம்.” ராமபிரான் அவதரிக்கக் காரணம், மற்றவர்களை மேல்நிலைக்கு அழைத்துச்செல்வதுதான். மோட்சம் என்பது மறுஉலகம் என்று சொல்வதைப் போலவே, விடுதலை பெறுதல் என்ற பொருளும் உண்டு. எதிலிருந்து விடுதலை பெறுதல் என்றால், துன்பங்களிருந்து விடுதலை பெறுதல். அதனால் தானே ராமன் காட்டிற்குச் செல்லும்போது அயோத்தி மக்கள் அழுதார்கள்.
`கிள்ளையொடு பூவை யழுத; கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை யழுத உருவறியாப்
பிள்ளை யழுத; பெரியோரை யென்சொல்ல
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்’ – (நகர் நீங்கு. 100)
என்று இந்தக் காட்சியின் மாட்சியை திரைப்படம் போல வர்ணிப்பான் கம்பன்.

ஏழும் ராமனும்

ராமபிரான் வாழ்வில் ஏழு என்கிற எண் மிகப் பொருந்தி வருவதைக் காணலாம்.
1. ஏழாவது அவதாரம் ராம அவதாரம்.
2. ஏழு மரா மரங்களைத் துளைத்தான்.
3. ராமன் எழுபது வெள்ளம் வாநர சேனைகளோடு இலங்கை மீது படையெடுத்தான்.
4. ஏழு உலகங்களிலும் அவன் பெருமை பேசப்படுகிறது.
5. ஏழு பிரகாரங்கள் உள்ள ஸ்ரீ ரங்கநாதரை அவன் குலதெய்வமாக அடைந்திருந்தான்.
6. ஆறு தம்பிகளோடு சேர்ந்து ஏழு பேராக இருந்தான். (நின்னோடும் எழுவரானோம்).
7. ஏழு காண்டங்களில் ராமகதை சொல்லப்பட்டிருக்கிறது. ஏழாவது காண்டம் உத்தர காண்டம்.
8. அனுமன் வீணையை வைத்து கொண்டு ஏழு ஸ்வரங்களால் ராமாயணம் பாடிக்கொண்டிருக்கிறார்.

தோல்வியே இல்லை

1. அவன் ஜெயராமன்.
2. ஸ்ரீ ராமாயணத்தில் தோல்வி என்பதே கிடையாது.
3. ராமன் அம்பு பழுதுபட்டு திரும்பியது இல்லை.
4. “ஒக பாணமு” என்று தியாகய்யர் ராம பாணத்தின் பெருமையைப்பாடுவார்.
5. ‘‘தோலா வீரன்” என்று வேதாந்த தேசிகர் ராமனின் வீரத்தைப் பாடுவார்.
6. எல்லா இடங்களிலும் வெற்றிதான். ஆகையினால்தான் ஸ்ரீ ராமஜெயம் எழுதுபவர்களுக்கும், ஸ்ரீ ராமஜெயம் சொல்பவர்களுக்கும் தோல்வி என்பது வருவது இல்லை.

ஸ்ரீ ராம நவமியில் ராம நாமம் சொல்லுங்கள்

ஸ்ரீ ராமநவமி வேறு. ஸ்ரீ ராமாயணம் வேறு அல்ல. ஸ்ரீ ராமாயணத்தில் ஒரு சில ஸ்லோகங்களையாவது நாம் அன்றைய தினம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீ ராம ஜெயத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். ராமநாமத்தை கோடிமுறை எழுதுவதற்கு ‘‘ராம கோடி’’ என்று பெயர். தினமும் நீராடியவுடன் பக்தியுடன் ராமநாமத்தை எழுத வேண்டும். தினமும் ஆயிரம் முறை இதை எழுதினால், 30 ஆண்டுகளில் இந்த எண்ணம் பூர்த்தியாகிவிடும். இப்படி எழுதிய நோட்டுக்களை பூஜை அறையில் வைத்து பூஜிக்க வேண்டும். இப்படி ராமநாமம் எழுதி பூஜித்தால் அந்த குடும்பத்தின் இருபத்தி ஒரு தலை முறை புண்ணிய பலத்தோடு வாழும்.

மூன்று முறை சொன்னால், சகஸ்ர முறை சொன்ன பலனா?

அற்புத சக்தி பொருந்திய இந்த மந்திரத்தின் மேன்மையை பரமேஸ்வரனே பார்வதிதேவிக்குச் சொல்வதாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வருகிறது.
‘‘ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே’’
என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள்.வீட்டில் சுபிட்சம் தேடி வரும். ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம் வரும்., அதற்கு கணித அடிப்படையில் பதில் உள்ளது. எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன. ‘‘ர’’ என்ற எழுத்துக்கு எண் 2ம், ‘‘ம’’ என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும். மேலே ஸ்லோகத் தில் ‘‘ராம’’ என்ற நாமம் மூன்று முறை வருகின்றது.
அதாவது 2X5 2X5 2X5. X2=20X5=100X2=200X5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே. இதுதான் ராம நாமத்தின் அற்புதம். அதனால்தான், ராம ராம ராம என்ற சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாம பலன் கிடைக்கும். இதை வேறு விதமாகச் சொல்லலாம்.
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”
(கம்பராமாயணம்: சிறப்புப் பாயிரம் 14)

ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும்?

ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதை காஞ்சிப் பெரியவர் இப்படி கூறுகிறார். இது ஒரு பத்ததி(முறை)
1. இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.
2. ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போகூடி, ஸ்ரீ ராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, “ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றி வந்து, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிஷம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.
3. மறுநாள் காலை அதே இடத்தில்கூடி, ஸ்ரீ ராமாவதாரத்தில் (கம்பராமாயணத்தில்) ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது சமஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீ ராம பட்டாபிஷேக சர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிஷம் பஜனை செய்து, ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.

Related Stories: