சென்னை அசோக்நகரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனை: ரூ.77 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்!

சென்னை: சென்னை அசோக்நகரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.77 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதால் நகைகளை பறிமுதல் செய்து பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை அசோக்நகரில் தேர்தல் பறக்கும் படையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 21 வாகனங்கள் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை கொண்டு சென்றன. அவற்றில் 20 வாகனங்களிடம் தங்க நகைகள், வெள்ளி பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்ததால் அவை விடுவிக்கப்பட்டது.

மீதமுள்ள ஒரு வாகனத்தில் மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி தங்க நகைகள், வெள்ளி பொருட்களை கொண்டு செல்ல முற்பட்டபோது தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். வாகனத்தை ஆய்வு செய்தபோது அதில், சுமார் ரூ.77 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வாகனத்தையும், அதிலிரிருந்த பொருட்களையும் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு நகைகள் கொண்டு செல்லப்படுவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: