சென்னை: பொன்னேரி அடுத்த தச்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்த விபத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யப் பிரியா (19) உயிரிழந்தார். காரில் மொத்தமாக 10 பேர் பயணித்த நிலையில் 9 பேருக்கு லேசான காயமடைந்தனர். சென்னையில் இருந்து தடா நீர்விழ்ச்சிக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் இருந்து கல்லூரியை சேர்ந்த 8 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என 10 பேர் ஒரே காரில் இன்று காலை ஆந்திர மாநிலம் தடா நீர்வீழ்ச்சிக்கு புறப்பட்டனர்.
காரை மாணவர் ராஜமூர்த்தி ஓட்டிச்சென்றார். அந்த கார், பொன்னேரி அடுத்த தச்சூரில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த காரில் பயணம் செய்த கல்லூரி மாணவி திவ்யப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
