1. திமுக கூட்டணியில் 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது எந்த சமரசத்தின் அடிப்படையில்?
கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டதை விட கூடுதல் தொகுதிகளில் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பு. அந்த அடிப்படையில் தான் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என்று திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்தோம். ஆனால் புதிதாக பல கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதை அவர்கள் வந்து தெரிவித்தார்கள். ஆனாலும், கடந்த முறை போட்டியிட்ட 6 என்ற எண்ணிக்கையிலாவது தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தினோம்.
கடைசியாக ஒரு தொகுதியைக் குறைத்து 5 என்பது எங்கள் கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்கிறோமே தவிர, சமரசத்தின் அடிப்படையில் ஒத்துப்போகவில்லை. இந்த தேர்தலில் பிஜேபி, அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு. ஆகவே தொகுதி எண்ணிக்கையில் எங்களுக்குத் திருப்தி இல்லை என்றாலும், அரசியல் நிலைப்பாடு வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
2. எதிரணியியில் இருந்த பல கட்சிகள் திமுக கூட்டணிக்கு வந்திருப்பதற்கான காரணம் என்ன?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே அதிமுகவோடு இருந்த பல கட்சிகள் திமுக தலைமையிலான அணிக்கு வந்துள்ளனர். அதற்கு மிக முக்கியமான காரணம், பிஜேபியோடு அதிமுக, தேர்தல் உடன்பாடு செய்துகொள்ளும் என்று ஒரு நிலைப்பாட்டின் விளைவாக அதிமுகவில் இருந்த பல கட்சிகள் திமுகவில் இணைய ஒரு முக்கிய காரணம். கடைசியாக சேர்ந்துள்ளது தேசிய முற்போக்கு திராவிட கழகம். மதச்சார்பற்ற அணி வலுப்பெற்றிருக்கிறது என்கிற முறையில் தான் எங்களைப் போன்றோர் திமுக அணிக்கு வந்த கட்சிகளை வரவேற்கிறோம்.
3. 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், மாறுபட்ட எந்த கருத்தையும் நீங்கள் தெரிவிக்கவில்லையா?
போராட்டங்களுக்கு அனுமதியே தராமல் காவல்துறையை ஏவிப் போராட்டங்களை ஒடுக்கியது போன்ற விஷயங்களில் எங்களுடைய மாறுபட்ட கருத்தை வலிமையாகத் தெரிவித்திருக்கிறோம். அதே மாதிரி போராட்டக்காரர்களை நடத்திய விதம், அதுவும் எங்களுக்கு உடன்பாடில்லாத ஒரு விஷயம். நிலம் தொடர்பான பிரச்னைகளில் வளர்ச்சி என்கிற பெயரில் விவசாயிகளுடைய சம்மதம் இல்லாமலேயே நிலத்தைக் கையகப்படுத்தியது, குறிப்பாக ‘நில ஒருங்கிணைப்புச் சட்டம்’ என்கிற பெயரில் புதிதாக ஒரு சட்டத்தையே கொண்டு வந்ததை கடைசி வரைக்கும் எதிர்த்தோம்.
அதே மாதிரி எட்டு மணி நேர வேலை நேரத்தை மாற்றியமைப்பது என்கிற முறையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. தனியார் பல்கலைக்கழகத் திருத்த மசோதா கொண்டு வந்தபோது நாங்க கடுமையாக எதிர்த்திருக்கிறோம், அது பிறகு திரும்பப் பெறப்பட்டிருக்கு. வேலை நேரத்தை மாற்றியமைத்தது திரும்பப் பெறப்பட்டிருக்கு.
இந்த மாதிரி பல விஷயங்களில் எங்களுடைய கொள்கை அடிப்படையிலேயே வேறுபாடான நடவடிக்கைகளை அணுகுமுறைகளை மேற்கொண்டபோது அதை எதிர்த்து வலிமையாகக் குரல் எழுப்பியிருக்கிறோம். அதற்குப் பிறகு தங்களுடைய போக்கை, நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கட்சி நாங்க வேறொரு கட்சி என்கிற முறையில் பல விஷயங்களில் இப்படி மாறுபட்ட விஷயங்கள் வருவது என்பது தவிர்க்க முடியாது.
4. தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டு வந்திருப்பதாக பிரதமரும், ஒன்றிய அமைச்சர்களும் சொல்லியிருக்கிறார்களே? அதுபோல மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்கள் ஏதேனும் உங்கள் நினைவில் இருக்கிறதா? எனக்கு தெரிந்தவரை வெளிப்படையாக இந்தத் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம் என்று பிஜேபி தலைவர்களாலேயே சொல்ல முடியாது. ரகசியமாக ஏதாவது கொண்டு வந்து அது அமல்படுத்தப்படாமல் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. வெளிப்படையா ஒரே ஒரு விஷயம் என்றால் பல்வேறு ரயில் நிலையங்களில் கட்டமைப்பு வசதிகள் என்பது மேம்படுத்தப்படுகிறது.
கட்டுமானப் பணிகள் என்பது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைத் தவிர, புதிதாகத் திட்டங்கள் வந்தது, அதற்காக இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் ஒன்றிய அரசாங்கம் ஒதுக்கியது என்று பார்த்தால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும்தான். அது பல ஆண்டுகளாக அந்தக் கட்டுமானப் பணி என்பது ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது எப்போது நிறைவு பெறும் என்பது அவர்களுக்கும் தெரியலவில்லை.
மாறாகப் பன்னாட்டிற்கான பல திட்டங்களுக்கான அனுமதியை மறுத்து கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு, கீழடி அகழ்வாய்வுக்கான அனுமதி போன்ற தமிழ்நாடு அரசாங்கம் வற்புறுத்திய பல திட்டங்களுக்கு அனுமதி மறுத்தது என்பதுதான் வெளிப்படையா தெரிகிறதே தவிர பிஜேபி எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாங்க என்பதை அவர்கள் தான் சொல்லணும். எனக்குத் தெரிந்து வெளிப்படையாக அப்படி எதுவும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கான திட்டங்கள் எதையும் தமிழ்நாட்டுக்கு வழங்கவில்லை.
