தமிழக சட்டமன்றத்தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில் திருப்பூர் தெற்குத் தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ள போதிலும், வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே இந்ததொகுதி வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தி அலை வீசத்தொடங்கியுள்ளது. டாலர் சிட்டி என அழைக்கப்படும் தொழில்நகரான திருப்பூரின் தற்போதைய அவல நிலைக்கு ஒன்றிய அரசின் கொள்கைகளே காரணம் என்பது பொதுமக்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் நீடிக்கும் குளறுபடிகள், நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வு போன்றவற்றால் திருப்பூரின் பின்னலாடைத் தொழில் கடும் முடக்கத்தைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, சமீபத்தில் அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வு விவகாரத்திக் ஒன்றிய பாஜ அரசின் மவுனம் காரணமாக 4 மாத ஏற்றுமதி வர்த்தகம் அடியோடு பாதித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், திருப்பூர் தெற்கு தொகுதியில் களமிறங்கும் பாஜவிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்களும், கேள்விகளும் முன் வைக்கப்படுகிறது.
குறிப்பாக தொழில்துறை சார்ந்து கடந்த 2014-க்கு முன்பு வரை 7 முதல் 10 சதவீதமாக இருந்த ஏற்றுமதி வரிச்சலுகை (டியூட்டி ட்ராபேக் ) தற்போது 2 முதல் 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. திருப்பூரின் பின்னலாடைத் தொழிலின் வளர்ச்சி பாதையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதியை ஊக்குவித்த பழைய எம்இஐஎஸ் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பெயரளவில் கொண்டு வரப்பட்ட புதிய ஆர்ஓடீடிஈபி திட்டத்தால் சர்வதேச சந்தையில் போட்டி போட முடியாமல் உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க நவீன இயந்திரங்கள் வாங்குவதற்காக வழங்கப்பட வேண்டிய பல நூறு கோடி ரூபாய் டப்ஸ் மானியம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதால், கடன் வாங்கி இயந்திரம் நிறுவிய குறுந்தொழில் முனைவோர் வட்டி கட்ட முடியாமல் தவிக்கின்றனர். மேலும், பருத்தி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தாமல் விட்டதும், இறக்குமதி பருத்திக்கு வரி விதித்ததால் உள்நாட்டில் நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்ததும், பஞ்சு இருப்பு மற்றும் விலை நிர்ணயத்தில் ஒன்றிய அரசு தலையிடாததும் சிறு, குறு நிறுவனங்களை முடக்கியுள்ளது.
இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நேரத்தில் தற்போது வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் பேக்கரி உணவகங்கள் மட்டுமல்லாது பின்னலாடைத்துறையிலும் பெரும் நலிவு ஏற்பட்டுள்ளது. டையிங்க், ஸ்ட்ரீமிங்க், காம்பேக்டிங்க் உள்ளிட்டவைகளில் சிலிண்டர் பயன்பாடு இன்றியமையாததாக இருப்பதால் தற்போது அவைகளின் சேவைக்கட்டணம் உயர்ந்தது மட்டுமல்லாது நூல் முதல் பேக்கிங் மெட்டீரியல் வரையிலான மூலப்பொருட்கள் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை எட்டியுள்ளது.
இன்னும் வேட்பாளர் முறைப்படி அறிவிக்கப்படாத நிலையில், தொகுதிக்குள் களமிறங்கத் தயாராகும் பாஜவினர் இந்த மக்கள் எதிர்ப்பை எப்படிக் கையாளப் போகிறார்கள் என்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அதிமுகவின் பலத்தை மட்டுமே நம்பி களம் காணும் பாஜவுக்கு அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் கூட கிடைக்குமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சமூக வலைதளங்களில் பாஜவிற்கு திருப்பூரில் இடமில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் ‘TirupurSayNoToBJP’ என்ற ஹேஸ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர்.
