திருத்துறைப்பூண்டி, மார்ச் 27: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் வளாகத்தில சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 40 ஆண்டுகளாக அந்த கட்டிடத்தில் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் சேதம் அடைந்தால் இதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இதனை கருத்தில் கொண்டு திமுக அரசு கடந்த ஆண்டு அதே இடத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கியது. இதன் காரணமாக கட்டுமான பணி தொடங்கி துரித கதியில் நடைபெற்றது. கட்டுமான பணி முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து, கடந்த டிசம்பர் 6ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தாலுகா அலுவலக வளாகத்தில், தற்போது புதிய கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருவதால், பொதுமக்கள் எந்த சிரமம் இன்றி வந்து செல்கின்றனர். இதன் காரணமாக புதிய சார்பாதிவாளர் அலுவலகம் கட்டி தந்த திமுக அரசிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
