திருச்சுழி, மார்ச் 27: திருச்சுழி அருகே சிறுவனிடம் இருந்த 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சுழி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பள்ளிமடம் பேருந்து நிறுத்தம் அருகே சாக்குப்பையுடன் சுற்றி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த திருச்சுழி போலீசார் சிறுவனிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால் சோதனை மேற்கொண்டனர். அப்போது சாக்கு பையில் சுமார் 40 மதுப்பாட்டில்கள் இருந்தது.
விசாரணை மேற்கொண்டதில், திருச்சுழியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் பணம் கொடுத்து மது கடையில் மதுபாட்டில்களை வாங்குவதற்கு அனுப்பியதாகவும், மதுபாட்டில்களை வாங்கி வந்த போது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து 17 வயது சிறுவனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 40 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் சிறுவனை டாஸ்மாக் கடைக்கு அனுப்பி மது பாட்டில்களை வாங்க தூண்டுதலாக இருந்த திருச்சுழியை சேர்ந்த கருப்பசாமி, கஜேந்திரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
