காஞ்சிபுரம், மார்ச் 20: திருப்
பணிகள் ஆகம மரபுகளை மீறுவதாக தொடுக்கப்பட்ட வழக்கு எதிரொலியாக காஞ்சி வரதராஜபெருமாள் கோயிலில் மாநில வல்லுநர் துணைக்குழு ஆய்வு செய்தது. அப்போது பக்தர்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிச் சென்றனர்.
உலக பிரசித்திபெற்ற அத்திவரதர், தேவராஜசுவாமி என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் உள்ளூர், வெளியூர், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு மேம்பாட்டு திருப்பணி நடந்து வருகிறது.
இந்தநிலையில் இந்த திருப்பணிகள் கோயிலின் ஆகம மரபுகளை மீறும் வகையில் இருப்பதாகவும், பாரம்பரிய கட்டிடங்களை சேதப்படுத்தும் வகையில் உள்ளது எனவும் கோயிலை கட்டிய கிருஷ்ணதேவராயர் வம்சத்தை சேர்ந்த சந்ததியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 23ம்தேதி காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் நடைபெறும் மேம்பாட்டு திருப்பணிகளை மாநில அளவிலான சிறப்பு வல்லுனர் துணை குழுவை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்து சமய அற நிலையத்துறை ஆணையர், மாநில அளவிலான சிறப்பு வல்லுனர்கள் துணை குழு அமைத்து கோயிலில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நியமித்த துணை குழுவை சேர்ந்த தலைமை ஸ்தபதி ராஜேந்திரன், தொல்லியல் ஆலோசகர் ராஜவேலு, ஓய்வுபெற்ற சிற்பக்கலை வல்லுநர் முத்துசாமி, ஓய்வுபெற்ற தொல்லியல் வல்லுநர் ராமமூர்த்தி, வைணவ ஆகம வல்லுநர்கள் கோவிந்தராஜ பட்டர், லட்சுமி நரசிம்ம பட்டாச்சாரியார் ஆகியோரில் கோவிந்தராஜ பட்டர் தவிர மீதமுள்ள 5 உறுப்பினர்கள் அடங்கிய துணை குழுவினர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆய்வு செய்ய வருகை தந்தனர்.
கிருஷ்ணதேவராயர் சந்ததியினர் வைணவ ஆகம விதிகளை மீறுவதாக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வைணவ ஆகம வல்லுனரான கோவிந்தராஜ பட்டர் வருகை தராததால் முழுமையான ஆய்வறிக்கையை தயாரித்து வழங்க முடியாது என மாநில சிறப்பு வல்லுநர்கள் துணை குழுவினரிடம் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் துணை குழுவினர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தெரிவித்து வேறொரு நாளில் ஆய்வு செய்வதாக தெரிவித்தனர். இருப்பினும் துணை குழுவினர், கோயில் நிர்வாக அறங்காவலரும் உதவி ஆணையருமான ராஜலட்சுமி மற்றும் கோயில் ஊழியர்களுடன் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு திருப்பணிகளை நேரடியாக பார்வையிட்டு குறிப்பு எடுத்து சென்றனர்.
மாநில அளவிலான சிறப்பு வல்லுனர்கள் துணைக்குழு திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதால் திருப்பணிகள் பற்றிய கருத்துகள் ஏதேனும் இருந்தால் பக்தர்களும் பொதுமக்களும் நேரடியாக துணை குழுவிடம் தெரிவிக்கலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கோயிலில் நடைபெறும் திருப்பணி குறித்து கருத்து தெரிவிக்க கோயில் வளாகத்தில் குவிந்தனர். பின்னர், ஆய்வுக்குழுவினர் பக்தர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தெரிவிப்பதாக கூறினர். இதையொட்டி விஷ்ணு காஞ்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
