ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் விழாமல் இருக்க குச்சிகள் நடவு செய்யும் பணி

ஊட்டி: ஊட்டி மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் மலர்செடிகள் தரையில் விழாமல் இருக்க குச்சிகள் நடவு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஆண்டு தோறும் மே மாதம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. தற்போது மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

பூங்கா முழுவதிலும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதனை பராமரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், பூங்காவில் தற்போது மலர் செடிகள் அனைத்தும் வளர்ந்துள்ளன. ஒரு சில செடிகளில் மொட்டுக்களும் காணப்படுகிறது. குறிப்பாக, டேலியா மலர் செடிகள் தற்போது நீண்டு வளர்ந்துள்ளன.

பெரும்பாலான செடிகளில் மொட்டுக்கள் காணப்படுகிறது. மலர் செடிகள் தரையில் விழாமல் இருக்க தற்போது செடிகளின் அருகே பாதுகாப்படிற்காக குச்சிகள் நடப்பட்டுள்ளன. பூங்கா முழுவதிலும் உள்ள டேலியா செடிகள் மற்றும் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள டேலியா செடிகளுக்கும் குச்சிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories: