தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது. மனம் என்னும் ஆழ்கடலில், ஞானம் என்னும் முத்தை எடுக்க உதவுபவள், இந்த யோகினி என்பதால், இவளுக்கு தரளா தேவி என்று பெயர்.குருவின் உபதேசங்களுக்கு காத்திருப்பவர்களை உணர்த்தும்போது, அவர்கள் குருவின் வாயில் இருந்து முத்து உதிராதா என்று காத்திருந்தார்கள் என்று தான் சொல்கிறார்கள். ஆகவே, பேசாதவர்கள் பேசினாலோ, குருவின் உபதேசத்தையோ முத்தோடு ஒப்பிடுவது வழக்கம். அந்த வகையில், அரிதிலும் அரிதான குரு உபதேசத்தை பெறுவதற்கும், அதைப் புரிந்து கொள்ளவும் இந்த தேவி உதவுவதால் இவளுக்கு தரளா தேவி என்று பெயர் கையில் தாமரை ஏன்?
இந்த யோகினி தனது இடது கையில் நீண்ட காம்பினைக் கொண்ட சிவப்பு தாமரை மலரை ஏந்தி இருக்கிறாள். அதன் அடிப்பாகம் தண்ணீரில் மறைந்திருக்கிறது. இந்த தாமரையும் அதன் தண்டும், இடகலை, பிங்களை நாடிகளுக்கு இடையில் இருக்கும் சுஷும்னா நாடியை குறிக்கிறது.மனிதனின் முதுகுத்தண்டில் இருக்கும் இந்த சுஷும்னா நாடியில் தான், சூட்சுமமான யோக சக்கரங்கள் இருக்கிறது. அதன் உச்சியில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூ வடிவில் சஹஸ்ரார சக்கரம் இருக்கிறது.
இந்த நாடியின் அடிப்பகுதியில், சக்தி வடிவமான குண்டலினி பாம்பு வடிவில் இருக்கிறது. அதை ஒரு யோகி தனது யோக சாதனையால் எழுப்பி, உச்சியில் இருக்கும் சஹஸ்ரார சக்கரம் எனப்படும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் இருக்கும் சிவத்தோடு சேர்க்கும் போது, யோக ஆனந்தம் விளைகிறது. இதுவே குண்டலினி யோகம்.இந்த குண்டலினி யோகத்தில் எளிதில் நம்மை முன்னேறச் செய்பவள் என்று காட்டவே கையில் நீண்ட காம்புடைய தாமரைப்பூவை தாங்குகிறாள் இந்த யோகினி. அதுமட்டுமில்லாமல், தாமரைப்பூ, செல்வத்தை குறிக்கிறது. அம்பிகையின் அடியவர்களுக்கு செல்வத்தை தருவதால் இவள் கையில் தாமரையைத் தாங்குகிறாள்.
தாமரை சேற்றில் தான் மலரும். சேற்றில் மலர்ந்த செந்தாமரை மணம் வீசும். அதுபோல ஆயிரம் தீய எண்ணங்களோடு கூடிய மனதை கட்டுப்படுத்தினால், ஞானம் என்னும் தாமரை மலரும் என்பதை உணர்த்தவே இந்த யோகினி நீண்ட காம்புள்ள தாமரை மலரை தாங்குவதாகவும் சொல்கிறார்கள்.
மற்றொரு கையில் என்ன இருக்கிறது?
இந்த யோகினி தனது மற்றொரு கையில் சங்கை தாங்குகிறாள். சங்கின் தலையில் சூரியனும் சந்திரனும் இருக்கிறார்கள். அதனுடைய வயிற்றில் வருணன் இருக்கிறார். அதனுடைய பின் பக்கம் பிரஜாபதி இருக்கிறார். அதனுடைய வாயில் கங்கையும் சரஸ்வதியும் இருக்கிறார்கள். இப்படி பல தெய்வங்கள் சங்கிற்குள் வசிக்கிறார்கள். இப்படி அனைத்து தேவர்களின் சக்தியையும் அருளையும் பெற்றுத்தருபவள் என்று காட்டவே இருந்த யோகினி கையில் சங்கம் ஏந்துகிறாள் என்று சொல்வதும் உண்டு.
உலகில் இருக்கும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் சங்கில் வசிக்கட்டும் என்று திருமால் வரம் தந்ததால், சங்கில் இருக்கும் ஜலம் அனைத்து புண்ணிய தீர்த்தங்களின் அம்சமாகும். ஆகவே சங்கு புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. சங்கு சுட்டாலும் வெண்மைத்தரும் என்று அவ்வை பாட்டி சொன்னதற்கு ஏற்ப, தீமையின் நடுவில் இருந்தாலும் தர்மத்தை கடைபிடிக்கும் திறனை கொடுப்பவள் இந்த யோகினி என்பதையும் இது காட்டுகிறது.
எங்கே தோன்றுகிறாள்?
வலது கரத்தில் வெண்மையான சங்கு அணி செய்கிறது. முத்தும், சங்கும் , தாமரையும் கடலில் தோன்றுபவை. அது போலவே இவள் பக்தர்களின் ஆழ்மனக்கடலில் தோன்றி அருள் செய்யும் குணம் கொண்டவள்.
சுவர்க்கோழி வாகனம் ஏன்?
இந்த யோகினி மிகவும் அபூர்வமான யோகினியாக கருதப்படுகிறாள். அதை குறிக்கவே இவள் சுவர்க்கோழி வாகனத்தோடு காட்சி தருகிறாள்.சுவர்க்கோழியானது இருக்கும் இடத்தை அறிய முடியாது. ஆனால், மிதமான ஒரு ஒலியை அது எழுப்பிக்கொண்டே இருக்கும். அதுபோலவே, இந்த யோகினியின் சாதனையில் முன்னேறுபவர்களுக்கு, உடலிலும் உள்ளத்திலும் ஒரு தெய்வீக அதிர்வலை தோன்றிக்கொண்டே இருக்கும் என்பது பலரும் அனுபவத்தில் கண்ட உண்மை.
சுவர்க்கோழி, இரவு முழுவதும் கிரிக் கிரிக் என்று ஒலி எழுப்பும் இயல்பு கொண்டது. அந்த ஒலி நம்மைத் தூங்க விடாது. அதுபோலவே இந்த யோகினி, சாதகனின் குண்டலினியை தூண்டும் உயர்ந்த தெய்வீக அதிர்வலையை எழுப்புவதாக சொல்கிறார்கள். இதன் மூலம் அழியும் இந்த உடலை அழியத்தன்மை உள்ள காயகல்ப உடலாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் நம்பப்படுகிறது. இக லோக ஆசைகளை பரலோக விருப்பமாக மாற்றி, மோட்சவாசலுக்கு அழைத்துச் செல்வாள்.
சுவர்க்கோழி எழுப்பும் இடைவிடாத சத்தம் மிக அதிகமான அதிர்வலை களைக் கொண்டது.. அதனோடு கூட இந்த யோகினி தனது கையில் இருக்கும் சங்கத்தையும் ஒலிக்கச் செய்யும் போது, அது காம குரோதமாகிய பகைவர்களை அழிக்கிறது. ஐம்புலன் களின் வெற்றிக்கு வழிவகுக்கிறது.எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகில் மாற்றம் ஒன்றே மாறாது எனும் உண்மையை உணரச் செய்பவள் இந்த யோகினி. உலகாய வாழ்க்கையின் நிலைமையை நமக்கு உணர்த்தி, முக்தியை நோக்கி நம்மை திருப்புபவள் இவள். எப்போதும் மாறிவரும் உலக வாழ்க்கையின் தன்மைக்கு ஏற்ப நமது மனத்தை மாற்றி, அவைகளைக் கண்டு கலங்காமல் ஏற்றுக் கொள்ளச் செய்வாள் இந்த யோகினி.
ஜி.மகேஷ்
