ராஜயோகம் அருளும் கும்பகோணம் ராமஸ்வாமி

அது 1614ம் ஆண்டு. ரகுநாதநாயக்கர் தமிழகத்தின் பெரும்பான்மையான பிரதேசத்தை ஆண்டுவந்த அற்புதக்காலம். தமிழகம் தாண்டி ஈழம்வரை வெற்றிக்கொடியேற்றி விண்ணுயரப் புகழ் பெற்றான். தன் கீர்த்தியனைத்தும் சூர்யகுலத் திலகமான ராமப்பிரபுவிற்கே என்று பாதம் படர்ந்தான். அகத்துள் ராமநாமம் சதாநேரமும் கொப்பளித்துக் கிடந்தது. மனக்கோயில் கட்டி ஆராதனம் செய்தவனின் அக ஆழத்தில் எம்பெருமானுக்கோர் ஆலயம் எப்போது எடுப்பிப்பேன் எனும் தாபம் தணலாக சிவந்தது. அரசாட்சி பாரத்தால் மெல்ல இந்தத் தாபம் சற்றே குளிர்ந்திருந்தது. ஆனால், அகத்தில் என்றும் குறையாத ராமவாசம் இடைவிடாது ரகுநாதரை நிறைத்தபடி இருந்தது. குணக்குன்றாக விளங்கும் ராமநாயகன் குடந்தையில் திடமாக அமர ஆவல் கொண்டார். ராமலீலையைத் தொடங்கினார். ரகுநாதரை வேறொரு பக்கம் திருப்பினார்.

ரகுநாதநாயக்கர் ஈழம் நோக்கி நகர்ந்தார். கடும்போரிட்டார். ஈழத்தை தன் விழி அசைவுளால் கட்டுப்படுத்தினார். ராமப்பிரபு இன்னும் தீவிரமாக குடந்தையில் தான் அமரப்போகும் இடத்தை தொடர்ந்து பார்த்தபடி இருந்தார். அதற்குள் ரகுநாதநாயக்கரை நோக்கிய ஓர் அதிர்ச்சி செய்தி வாயுவேகத்தில் பேரலையாக அவன் இதயத்தை முட்டியது. ஜக்கராயன் என்பான் கல்லணையை சிதறடித்துக் கொண்டிருக்கிறான் என்றும் சோழதேசம் சிதைத்து விடுவதாக மிரட்டிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்தன.

ராமப்பிரபு… என்று பிளிறி எழுந்தார். அமைதியாக அமர்ந்தார். குடந்தைக் காவிரியின் கரைகளில் தெள்ளிய ராமனின் கருணை அலைகள் முட்டிக் கொண்டிருந்தன. மென்மையான தென்றல் குடந்தையை தழுவியபடி நகர்ந்தது. அந்த நகரம் இன்னும் ஒளிர்ந்தது. ஆனால், ரகுநாதரை மென்மையாக ஒரு துக்கம் போர்வையாக போர்த்திக் கொண்டது. கண்கள் மூடி தியானிக்க எம்பெருமான் கோதண்டத்தை மெல்லத் தூக்கினார். மந்தகாசப் புன்னகையால் மலர்த்தினார். ரகுநாதன் ராகவனோடு ரமித்தான். சட்டென்று கண்கள் திறந்தான். தலைமைத் தளபதி பேரரசன் முன்பு கைகட்டி நின்றான். ரகுநாதர் புருவம் சுருக்கினார். ‘எதனால் இது’ என்று ஒரு வார்த்தை உதிர்த்தார். ஓர் அம்பு, ஓர் சொல்லாக அது அவனைத் துளைத்தது. தஞ்சையைத் தாக்குவதற்காக ஸ்ரீரங்கத்தில் தயாராக இருக்கும் கொப்பூரி ஜக்கராயன்பற்றி தளபதி சொல்லத் தொடங்கினார்.

விஜயநகரப்பேரரசன் வேங்கடபதிராயரை முதுமை முழுமையாக ஆக்ரமித்தது. மெல்ல அவரை மரணப்படுக்கையில் சாய்த்தது. அவரது மனைவியரை கண்கள் கலங்க பார்த்தபடி படுக்கையில் கிடந்தார். அரசாள ஓர் ஆண்மகன் இல்லையே என வெதும்பினார். மரணம் தன்னை மாய்ப்பதற்குள் அரண்மனை மாளிகைக்கு ஓர் அரசகுமாரன் வேண்டுமே எனும் கவலை இடைவிடாது நெஞ்சை அறுத்தது. மன்னவனின் மனைவியருள் பேரழகியான இளையவள் பாயம்மா வேங்கடபதிராயரின் கவலையை புரிந்துகொண்டாள்.

அவள் சிந்தனையை அவ்வப்போது மேலும் கெடுத்துக்கொண்டு குறுக்குவழி சொல்லும் கொப்பூரி ஜக்கராயன் இளவரசனுக்கு என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தான். தமக்கையை அழைத்து காதருகே ஓர் விஷயம் விளக்கினான். அவளும் சந்தோஷமாகச் சிரித்தாள். தன் வயிற்றுப்பகுதியை பார்த்துக் கொண்டாள். கொஞ்சநாட்களுக்கு நீ கர்ப்பமாக இரு என்று மட்டும் சொன்னாள். நடைதளர்ந்து வேங்கடபதிராயரின் முன்பு நாணி நின்றாள். தலைதூக்கி தலைவன் பார்த்தபோது காதருகே விஷயம் சொன்னாள். அதற்குள் ஊருக்குள் ஓர் அந்தண கர்ப்பவதியை ஜக்கராயன் பார்க்கப் போயிருந்தான்.

வேங்கடபதிராயர் தனக்கொரு வாரிசா என்று தள்ளாடி எழுந்தார். பாயம்மாவை நோக்கி கண்ணீர் பெருக்கினார். அவள் அவ்விடம்விட்டு நகர்ந்ததும் பெருங்கவலை கொண்டார். ராமா இதென்ன லீலை என வியந்தார். எனக்கா…மகனா… என அலுத்துக்கொண்டார். அவர் புலம்பலுக்கும் ராமச்சந்திரமூர்த்தி செவிசாய்த்தார். தன் பெயர் கொண்ட ஓர் அரசகுமாரனின் மீது தன் அமுதப்பார்வையை வீசினார். அவனுடைய பெயரும் அவனருளால் ஸ்ரீராமன் என்று அமைந்தது. ஸ்ரீராமசக்தி அவனை முழுவதுமாக ஆட்கொண்டது.

அந்தணப்பெண் குழந்தையைப் பெற்றாள். ஜக்கராயன் குழந்தையை பறித்துக்கொண்டான். இவளும் நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருந்தாள். பிரசவிப்பது போல் அழகாக நடித்தாள். குழந்தை இடம் மாறியது. பாயம்மாவிற்கு குழந்தை பிறந்துவிட்டது என்று ஊர் முழுவதும் நம்பியது. ஜக்கராயன் குதூகலித்தான். குழந்தையை வாரிஅணைத்துக் கொண்டு சென்றான்.

வேங்கடபதிராயரிடம், பாருங்கள் குலத் திலகத்தை என்றான். குழந்தையை குழப்பமாகப் பார்த்தார். இரண்டு நாட்களுக்குள் பாயம்மாவை அழைத்தார். பொன்னும், பொருளும் வாரிவாரி அளித்தார். ஜக்கராயன் நானே இனி மாமன்னன் என உள்ளுக்குள் கொக்கரித்தார். அமைதியாக நின்று பொய்ப் பணிவு காட்டினான். மன்னரின் அருகேயே நின்றிருந்த சகோதரரான சிக்கதேவராயன் எனும் ஸ்ரீரங்கனை கோபத்தோடு அடிக்கடி பார்த்தபடி இருந்தான்.

அப்போது யாரும் எதிர்பாராவண்ணம் வேங்கடபதியார் தனது அரச மோதிரத்தைக் கழற்றினார். ஜக்கராயன் அருகே அந்த குழந்தையை தூக்கிச் சென்றான். ஆனால், அரசரோ சிக்கதேவராயனான ஸ்ரீரங்கனின் கைகளைப் பிடித்து மோதிரத்தை அணிவித்தார். ஜக்கராயன் இருண்டான். நிலைகொள்ளாது தவித்தான். வேங்கடபதிராயர் அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினார். இரண்டு நாட்களுக்குள் பரமபதம் ஏவினார்.

ஜக்கராயன் பெரும் பேரரசைக் கைப்பற்றினான். முன்னரே தனக்குச் சாதகமாக மாற்றியிருந்த அனைவருக்கும் ஓர் பதவி கொடுத்தான். சிக்கதேவராயரை குடும்பத்தோடு சிறைபிடித்தான். அதில் ஸ்ரீராமன் எனும் பன்னிரண்டு வயது பாலகன் எதுவும் புரியாது விழித்தான். ஆனாலும், ராமபிரானின் விழி அம்பு அமுதமாக அப்பாலகனை நோக்கியே இருந்தது. நாட்டில் ஜக்கராயனின் அநீதியை பொறுக்காத உண்மையான ராஜவிசுவாசிகள் யாசமநாயக்கர் எனும் குறுநிலமன்னனின் கீழ் படைபோன்று ஒன்றாகத் திரண்டனர். எப்படியேனும் ராஜகுடும்பத்தை அரியணையில் அமரவைக்க வேண்டும் என்று வெறியோடு அலைந்தனர். யாரேனும் ஒருவரையாவது மீட்க வேண்டும் என்று தீவிரமாகத் திட்டமிட்டனர்.

மறுநாள், வண்ணானாக, துணிகளை துவைக்கும் தொழிலாளியாக ஒருவன் வேடமிட்டான். ஸ்ரீரங்கனின் இரண்டாம் மகனான ஸ்ரீராமனை துணியோடு துணியாக சுற்றி வெளியே கொண்டு வந்துவிட்டான். ஜக்கராயனின் காதுக்கு இந்த செய்தி சென்றது. நீண்ட வாளை எடுத்துக்கொண்டான். ஸ்ரீரங்கராயர், பதினேழு வயதான அவன் மூத்தமகன், மனைவி, இரண்டாவது மகன் ஆகியோரை வாளால் துண்டு துண்டாகச் சிதைத்தான்.

யாசம நாயக்கன் எப்படியாவது ஸ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிடுவான் என்று பயந்தான். சட்டென யாசமநாயக்கனையும், ஸ்ரீராமனையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று படை திரட்டினான். செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கரையும், மதுரை வீரப்ப நாயக்கரையும் தமது வலைக்குள் கொண்டு வந்தான். நீங்களும் உதவ வேண்டும் என்று கால் பிடித்துக் கதறினான். அவர்களும் சரியென்றார்கள். பெரும்படையோடு திரிசிரபுரம் எனும் இன்றைய திருச்சிக்கு வந்தமர்ந்தான்.

இறைச்சக்தி கோவிந்ததீட்சிதர் எனும் மகானின் வடிவத்தில் விஜயநகர இளவலான ஸ்ரீராமனுக்கு துணை வந்தது. யாசம நாயக்கருக்கு ஆதரவாகப் பேசிற்று. ஜக்கராயனின் கொடுங்கோன்மையான குணத்தையும், அவன் கொன்று போட்ட ஸ்ரீரங்கராயர் குடும்பத்தைப்பற்றி ரகுநாதநாயக்கரின் தந்தையான அச்சுதப்பநாயக்கரிடம் சொன்னார். அச்சுதப்பநாயக்கர் தனது மகனான ரகுநாதனிடம் இவ்விஷயத்தைக் கூறவேண்டும் என எத்தனிக்கும் வேளையில் ஜக்கராயன் திருச்சி ஸ்ரீரங்கத்தில் அச்சுதப்பநாயக்கர் என்ன சொல்லப்போகிறார் என்று நிலைகொளாது தவித்தான். ஒற்றர்கள் மூலம் அச்சுதப்பநாயக்கர் யாசமநாயக்கர், ஸ்ரீராமனின் பக்கம் நிற்கிறார் என்று அறிந்தவுடனேயே கல்லணையை குறிவைத்து அடித்தான். சோழதேசம் நம்மைக் கண்டு மிரளட்டும் என்று எதிர்த்து நின்றான்.

ஜக்கராயனின் தந்திரத்தையும், கொடுங்கோன்மையையும் அறிந்த ரகுநாத நாயக்கர் ஈழத்திலிருந்து பெரும்படையோடு அதிவேகமாக காவிரியின் தென்கரையிலுள்ள பழமார்நேரியை அடைந்தான். அங்கிருந்து தோப்பூரை நோக்கி முன்னேறினான். தற்போது அது தோகூர் என்றழைக்கப்படுகிறது. ராமபத்ரன் எனும் தமது பட்டத்துயானையின் மீது அமர்ந்து ஜக்கராயனைத் தேடினான். அவனின் இருமருங்கும் இணையிலா வலிமை கொண்ட யானைகள் அணிவகுத்து நின்றன. ஜக்கராயனின் உடல், பயத்தில் வியர்த்தது. இதென்ன பெரும்படை என மோதினான்.

ரகுநாத நாயக்கர் ஜக்கராயனை இருகூறாக்கினார். செஞ்சி மற்றும் மதுரை நாயக்கர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தார். ராமச்சந்திரமூர்த்தி அவனது அகத்துள் தூக்கியிருந்த கோதண்டத்தை மெல்ல கீழே வைத்தார். அக்காட்சி அவனைப் பரவசப்படுத்தியது. பட்டாபிஷேகக் காட்சியில் வெற்றிக் களிப்போடு மட்டுமல்லாமல், எமபெருமான் அமர்ந்தகோலத்தில் காட்சியளித்தது அவனை களிப்பூட்டியது.

ஸ்ரீராமம் ரகுநாதனை குடந்தைக்கு அழைத்தது. யாசமநாயக்கரும், ஸ்ரீராமன் எனும் விஜயநகரப்பேரரசின் குலக் கொழுந்தும் கும்பகோணத்திற்குச் சென்றனர். ரகுநாத நாயக்கர் அவ்விருவரையும் எதிர்கொண்டு அழைத்தான். ஊரார் சிலிர்த்தனர். ராமநாமத்தை விண் அதிரச் சொன்னார்கள். அந்தப் பன்னிரண்டு வயதான பாலகனான ஸ்ரீராமனின் முகப்பொலிவும், பிரகாசமும் பார்த்து அதிசயித்தார். ஸ்ரீ ராமப்பிரபுவே வந்திருக்கிறாரோ என்றெண்ணினார். குடந்தையின் மையத்தே ஸ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்து விஜயநகரப் அரசனாக ஸ்ரீராமராயராக மாற்றினார்.

அரியணையில் ஏற்றினார். அவர் இதயத்தில் ராமராகவனுக்கே பட்டாபிஷேகம் செய்வதுபோல பாவித்தார். மாமன்னரின் இச்செயல் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ராமதாசனான ஆஞ்சநேயரைப்போன்று தன்னை நினைத்துக்கொண்டார். மகாகவியும், சிறந்த இசைவிற்பன்னனுமான ரகுநாதன் தம் கைகளில் வீணையை ஏந்தினான். சங்கீதசுதா என்று மிகச்சிறந்த இசைநூலை எழுதியவனல்லவா அவன். பட்டாபிஷேகத்தன்று ராமகீர்த்தனத்தை நெக்குருக, கண்களில் நீர் பெருக இடையறாது பாட கூட்டம் குலுங்கி அழுதது.

குடந்தையாம் கும்பகோண அற்புதத் தலத்தில் என் ராகவன் ராமனுக்கோர் பெரிய கோயில் எடுப்பிப்பேன் என்றான். அதிவேகமாக அதற்கான ஏற்பாடுகள் செய்தான். எந்த இடத்தில் விஜயநகரவாரிசான ஸ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் நடந்ததோ அத்தலத்திலேயே ஓர் பெருங்கோயிலை பார்த்துப் பார்த்து கட்டினான். தனக்குள் அக்னியாக தகித்துக்கொண்டிருந்த ராமபக்தியையும், சிலிர்த்து சிருங்காரமாக தன்னிலவாக திகழ்ந்த கலைத்திறத்தையும் இத்தலத்தில் கூடைகூடையாகக் கொட்டி கோபுரமாக்கினான்.

யுகங்களாக புராணப் பெருமை கொண்டது கும்பகோணம். அதில் ரத்னமாக ஒளிர்கிறது ராமஸ்வாமி திருக்கோயில். புராணத்திற்கு இணையாக நானூறு ஆண்டுகட்கு முன்பு சரித்திரப் பின்னணியில் பெரும் போர்ச்சூழலின் இறுதியில் எழுப்பப்பட்டது. ராஜபக்தியில் விளைந்த ஞானப்பிரானின் கருணை கருவூலமே இந்த ராமஸ்வாமி திருக்கோயில். அவன் ஆசையாக அழகாக கட்டிய இக்கோயிலை நாமும் சற்று அனுபவித்துப் பார்ப்போமா.

கும்பகோண நகரத்தின் மையமாக அமைந்துள்ளது ஸ்ரீ ராமஸ்வாமி கோயில். ராஜகோபுரம் நெடிதுயர்ந்து ராமநாம முத்திரையுடன் வரவேற்கிறது. மகாமண்டபத்திற்குள் நுழைந்தவுடன் மாபெரும் சிற்பக்காடுகளுக்குள், எழில் சூழ் சிற்பச் சோலைகளுக்குள் நுழைகிறோம். சிற்பக்கலையில் இதற்கு மிஞ்சி வேறெதுவும் செய்ய முடியுமா என்று சவால் விட்டிருக்கிறார்கள். கற்கள் பேசுமோ என்றவருக்கு இக்கோயிலில் கற்களைக்கொண்டு காவியம் படைத்தான். ரகுநாதநாயக்கர் தமது துணைவியரோடு ராமனை பணிவாக வணங்கி நிற்கும் சிற்பம் காண, நமக்கும் அவனை வணங்கத் தோன்றும்.

ஆச்சரியமாக சுக்ரீவபட்டாபிஷேக புடைப்புச் சிற்பம் காணும்போது விழி விரியும். திருவிக்கிரமனாக நிமிர்ந்த எம்பெருமானின் சிற்பம் முன்பு நிற்க பிரமாண்ட சக்தியின் முன்பு சிறுதூசாக மனம் உணரும். ராமபட்டாபிஷேகத்தைப் பார்க்க அகமும், புறமும் மறைந்து வெறும் ராமம் மட்டுமே இங்கிருக்கிறது எனும் பேருண்மை திரண்ட வெண்ணெயாக திகழ்ந்தெழும். ஆஞ்சநேய ஸ்வாமியை விதம் விதமான சிற்பங்களில், பல்வேறு பக்திப்பாவனை கொண்ட திருமுகங்களாக காட்டியிருக்கிறான். பாரதத்தின் பெருமை கூறும் ரிஷிகளின் திருவுருவங்களை நூற்றுக்கணக்கில் கல்லில் வடித்திருக்கிறான். முனிவர்களின் முகத்தில் தவழும் அமைதியை கண்ட மாத்திரத்தில் நமக்குள்ளும் அதைப் பரவிடச் செய்யும் வித்தையை அநாயாசமாகச் செய்திருக்கிறான்.

ஒன்றா…இரண்டா…நூறா…ஆயிரமா… எத்தனை என்று எண்ணி மாளவில்லை. இது பக்தியா… கலைத்திறனா… என்று பிரித்துப் பார்க்க இயலவில்லை. இந்தச் சிற்பம் அழகு, அதோ அந்தச் சிற்பம் எவ்வளவு நேர்த்தி என்று ஒவ்வொன்றாகப் பார்த்த மனம், பலநூறு சிற்பங்கள் கொடுத்த பிரமிப்பில் அயர்ந்து போகிறது. வர்ணிக்க வார்த்தைகள் இல்லாது தவித்து, அமைதியாகிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இது தெய்வம் தானே தமக்காக கட்டிக்கொண்ட கோயில். தானே விரும்பி அமர்ந்த திருத்தலம் என்று மனம் விண்டு போகிறது.

சிற்பக்காடுகள் தாண்டி நேரே கருவறை நோக்கி நகரும்போது பச்சைக்கற்பூரத்தின் மணமும், துளசியின் வாசமும் நெஞ்சை குளிர்விக்க, குங்குமத்தின் சுகந்தம் மனதை சுழற்றும். மூலஸ்தானத்தில் பட்டாபிராமனாக ராமச்சந்திரஸ்வாமியும், சீதாப்பிராட்டியும் ஒரே சிம்மாசனத்தில் அமர்ந்திருந்து ராஜ்யபரிபாலன திருக்கோலத்தில், சாளக்கிராம திருமேனியாக சேவை சாதிக்கிறார். கம்பீரத்தோற்றம். இடதுகாலை மடக்கி மற்றொருகாலை பூமியில் தொங்கவிட்டிருக்கும் அழகு காணுதற்கரியது. நீருண்டமேகம் போன்ற நிறம். அதில் ஞானச்சூரியனின் கிரணங்களால் ஒளிரும் தெள்ளிய திருமுகம். தாமரைபோன்ற மலர்ந்த கண்களில் அமுதச்சாரல் வீசுகின்றன.

கூரிய நாசி. செவ்விய இதழ்கள். அதன் ஒரமாகத் தவழும் பேரானந்தப் புன்னகை. கைகள் அபய ஹஸ்தம் காட்டி எப்போதும் காப்பேன் என்று கூறுகிறது. சீதாப்பிராட்டியார் அருளமுதம் பெருக்கி ஸ்ரீராமனிடம் விநயமாக நம் குறைகள் எடுத்துக்கூறுகிறார். நிறைவான வாழ்க்கையை வாரித் தருகிறார். அருகேயே சத்ருக்னன் ராம அண்ணாவிற்கு வெண்சாமரம் வீசும் காட்சி வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புதம். தர்மத்தை அழகாக வாழ்ந்து வழிகாட்டும் அருமைச் சகோதரன்.

லஷ்மணாழ்வார் ஸ்ரீராமரின் கோதண்டத்தை கையில் ஏந்திக்கொண்டு, அஞ்சலி ஹஸ்தமாக கைகூப்பிக்கொண்டு நிற்பதைப்பார்க்கும்போது உள்ளுக்குள் ஒரு கேவல் பொங்கிவருகிறது. அவருக்குப் பக்கத்திலேயே பரதாழ்வார் வெண்குடை சமர்ப்பித்துக்கொண்டு நிற்கும் காட்சி காண கண்கள்கோடி வேண்டும். எல்லோரையும் தாண்டி ராம சேவகனாக, ராம தாசனாக, அனைத்தையும் ராம சொரூபமாக பார்க்கும் ஆஞ்சநேயஸ்வாமி இத்தலத்தில் ஆச்சரியமான முறையில் சேவைசாதிக்கிறார். கைகளில் வீணை ஏந்தி, சதாகாலமும் ராமகாவியச் சுவடியை பாராயணம் செய்துகொண்டிருக்கும் கோலம் காணக்கிடைக்கா. அக்காட்சியை காணும் கண்களில் கண்ணீர் தானாய் சுரக்கும். உற்சவமூர்த்திகள் பொலிந்து அழகாகக் காட்சிதருகின்றனர்.

சந்நதியில் மனம் காணாது போகிறது. அயோத்திக்கே சென்று விட்ட ஓர் உணர்வு நம்மைச் சூழ்கிறது. எம்பெருமானுக்குச் நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் ராம..ராம..ராம..எனும் திவ்யநாமத்தை சொல்வதேயாகும். இதுவே சகலத்தையும் கொண்டுவந்து கொடுக்கும் என்பது வேதரிஷிகளின் வாக்கு.பிராகாரச் சுற்றுச் சுவரில் வேறெந்த கோயிலிலுமில்லாத அளவுக்கு ராமாயணத்தை மிக அழகிய சித்திரங்களாகத் தீட்டியுள்ளனர். நாயக்கர்கால பாணியில் வரைந்த ஓவியங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. தூரிகையால் சித்திரங்கள் வரைந்து ராமகாதையை அழகாகச் சொல்கின்றன. ராமாயணமா அல்லது ராம ஆரண்யமா என்று பிரமிக்கவைக்கின்றன.

இதைப்பார்த்தாலே போதும் ராமாயணப் பராயணப் பலன் நமக்குக் கிடைத்து விடும். பெரிய கோயில். நின்று நிதானமாக தரிசிக்க வேண்டிய ஆன்மிகக் கருவூலம். பார்க்கப் பார்க்க ஆயிரம் விஷயங்களை கொட்டும் கோயில். வெறுமே ராமநாமத்தைச் சொல்லுங்கள். இத்தல ராமர் உங்களை அழைப்பார். பிராகாரத்தைச் சுற்றி வந்து நமஸ்கரித்து நிமிர ராமனின் அருட்பாணம் நம்மை துளைத்தெடுப்பதை எளிதாக உணரலாம்.

கிருஷ்ணா

Related Stories: