திமுக ஆட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் மக்களின் தாகம் தீர்த்த ஜக்கனாரை ஊராட்சி மன்றம்

கோத்தகிரி : ஜக்கனாரை மேல்கேரி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 24 மணி நேரமும் பயன்படுத்தும் வகையில் இயற்கை குடிநீர் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஜக்கனாரை ஊராட்சி மன்றம். இங்கு 15 வார்டுகளை உள்ளடக்கி 47 கிராமங்கள் உள்ளன.

ஜக்கனாரை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளான அரவேனு, ஜக்கனாரை, சக்கத்தா, அண்ணா நகர், குண்டூர் காலனி, தொத்தமுக்கை, கெரடா மற்றும் அரவேனு சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகளை முன்னெடுத்து, அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.கோத்தகிரி பெரிய சோலை வனப்பகுதியில் இருந்து இயற்கை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

குறிப்பிட்ட சில காரணங்களான குடிநீர் குழாய் சீரமைப்பு, நீர்த்தேக்க தொட்டி, தொலைதூரத்தில் இருந்து தண்ணீர் வர சிரமம் போன்ற காரணங்களால் குடிநீர் விநியோகம் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜக்கனாரை கிராமத்திற்கும்,15 ஆண்டுகளுக்கு முன்பு சக்கத்தா கிராமத்திற்கும் நிறுத்தப்பட்டது. ஆனால் அதிக குடியிருப்புகளை கொண்டு, அதிக மக்கள் வசிக்கும் இந்த கிராமங்களில் குடிநீர் பிரச்னை தலை தூக்கி இருந்தது.

திமுக ஆட்சியில் ஜக்கனாரை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சுமதி சுரேஷ் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து மீண்டும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்தார். இயற்கையான முறையில் உருவாகும் சோலை குடிநீர் சுமார் 5 கி.மீ தொலைவில் இருந்து ஜக்கனாரை மேல்கேரி கிராமத்திற்கு கொண்டு வர திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதற்காக பதினான்காம் நிதிக்குழு மானியத்தில் 41.62 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.கோத்தகிரி பெரிய சோலை வனப்பகுதியில் இருந்து குடிநீர் குழாய்கள் அமைத்து ஜக்கனாரை மேல்கேரி கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் குடிதண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

திமுக ஆட்சியில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் முக்கிய குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வாரம் மூன்று நாட்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட கிராமத்திற்கு தற்போது 24 மணி நேரமும் எந்தவித தட்டுப்பாடும் இன்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: