தேர்தல் நடக்கும் மற்றும் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் சட்டவிரோத பணம், மது, போதைப்பொருள், ஆயுதங்களை அதிகம் பறிமுதல் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை: தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்கள் மற்றும் அவற்றின் எல்லையை ஒட்டியுள்ள 12 மாநிலங்களில் சட்டவிரோத பணம், மதுபானம், போதைப்பொருள், ஆயுதங்களை அதிகபட்சமாக பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தலையொட்டி மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக் கூட்டங்களை தேர்தல் ஆணையம் நடத்தியது. தேர்தல் புலனாய்வு தொடர்பான பல்துறை குழு அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்,
1. இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் எல்லையை ஒட்டியுள்ள 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தலைமைச் செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை தலைமை இயக்குநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், அமலாக்க முகமைகளின் தலைவர்களுடன் ஒரு ஆய்வு கூட்டத்தை நேற்று நடத்தியது.
தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்யவும், ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், வன்முறையற்ற, மிரட்டலற்ற மற்றும் தூண்டுதல்களற்ற தேர்தலை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஆணையம் உத்தரவிட்டது.
2. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ்.சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து, வரவிருக்கும் பொதுத்தேர்தல்கள் நடைபெறவுள்ள அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் தயார்நிலை, சட்டம் ஒழுங்கு நிலைமை, சட்டவிரோத பணம், மதுபானம், போதைப்பொருள், ஆயுதங்கள் பறிமுதல், மாநிலங்களுக்கு இடையேயான சோதனைச்சாவடிகள் மற்றும் செலவினங்கள் அதிகம் செய்யப்படக்கூடிய தொகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
3. தேர்தல் நடைபெறவுள்ள மாநில அதிகாரிகள், தங்களின் ஒட்டுமொத்த தயார்நிலை, சட்டம் ஒழுங்கு சிக்கல்கள், செலவின அமலாக்கம் மற்றும் மத்திய முகமைகள் மற்றும் அண்டை மாநிலங்களுடனான நிலுவையில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆணையத்திடம் விளக்கினர். எல்லை மாவட்டங்கள் மற்றும் மாநில/யூனியன் பிரதேச எல்லைகளை மூடி அமைதி மற்றும் ஒழுங்கை பராமரிப்பதில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
4. தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தூண்டுதல்கள் மற்றும் வன்முறையற்ற தேர்தலை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அண்டை மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
5. மத்திய நேரடி வரிகள் வாரியம், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், அமலாக்க இயக்குநரகம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், மத்திய பொருளாதார புலனாய்வுப் பணியகம், நிதி புலனாய்வு பிரிவு, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் சங்கம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய கடலோர காவல்படை, சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம், இந்திய விமான நிலையங்கள் ஆணையம், மத்திய ஆயுத காவல் படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ், இந்திய கடலோர காவல்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகிய முகமைகளின் தலைவர்கள், தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் எல்லை பகுதிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், மாநிலங்களுக்கு இடையேயான சோதனைச் சாவடிகளில் சோதனைகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
6. போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம், வருமான வரித்துறை, மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் உள்ளிட்ட மத்திய முகமைகள், தேர்தலுக்கு முந்தைய காலத்தில் தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்தவும், சட்டவிரோத பணம், மதுபானம், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை அதிகபட்சமாக பறிமுதல் செய்யவும், புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் செயல்படவும் உத்தரவிடப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: