சென்னை: சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் தாக்கியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதேபோல, பாதிக்கப்பட்ட தங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் தாயும் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தினந்தோறும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இறுதி இழப்பீட்டு தொகையை வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கும் போது போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். காவல் துறை அதிகாரிகளுக்கு எதிரான துறைரீதியான நடவடிக்கையை அரசு சுதந்திரமாக மேற்கொண்டு, விரைந்து முடிவெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
