வேடசந்தூர்: வேடசந்தூர், கொடைரோடு பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு கரூரில் இருந்து காரில் வந்தார். அவருக்கு பின்னால் அமைச்சர் அர.சக்கரபாணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வாகனங்களில் வந்தனர்.
அப்போது கரூர் – திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் வேடசந்தூருக்கு முன் உள்ள கல்வார்பட்டி போலீஸ் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வந்த காரையும் நிறுத்தி சோதனை செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நேற்று திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, அவர் கூட்டத்தை முடித்து கொண்டு திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலை வழியாக மதுரையில் நடைபெறும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை நோக்கி சென்றார்.
கொடைரோடு டோல்கேட் வந்தபோது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், உதயநிதி ஸ்டாலின் காரையும் நிறுத்தி சோதனை செய்தனர். காரின் டிக்கியை திறந்து அதிலிருந்த பைகள், சூட்கேஸ்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். இது 5 நிமிடங்களில் முடிந்தது. சோதனைக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு கிளம்பிச் சென்றார்.
