சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக சார்பில் 297 திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளோம். இதை நிறைவேற்ற, தமிழகத்தின் நிதி ஆதாரத்தை சரியான முறையில் கையாண்டு நிதியை அதிகப்படுத்துவோம். இதன்மூலம் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவோம். கொரோனா காலத்தில் வருவாய் இல்லாமல் இருந்தபோது, திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினோம்.
கடந்த தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்கலாம், ஆனால் இந்த தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன். அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்படும். ஜி.கே.வாசன், ஐஜேகே, ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கட்சிகளுக்கு இன்று (நேற்று) அல்லது நாளைக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விடும்.
புதிதாக வேறு கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு இல்லை. புதிய தமிழகம் எங்களோடு பேசினார்கள். ஆனால், அவர்கள் சொன்னதை நிறைவேற்ற முடியாததால் கூட்டணிக்குள் வர முடியவில்லை. சாத்தான்குளம் கொலை வழக்கில், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டால் அதிமுக வரவேற்கும். அதிமுக எந்த குற்றவாளிகளையும் காப்பாற்றாது.
அதிமுக கூட்டணியில் அங்கும் வகிக்கும் கட்சிகளுக்கு விரைவில் எந்தெந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று அறிவிக்கப்படும். பிரசாரத்தை நாளை (இன்று) தொடங்குகிறேன். நாங்கள் விரைவாக செயல்பட்டு வருகிறோம். சசிகலா – ராமதாஸ் கூட்டணியால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். நிலைக்கு ஏற்ப தொகுதிகள் வழங்கப்படுகிறது என்றார்.
