×

உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு முறையீடு பாமக மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிக்கை: வழக்கு இன்று விசாரணை

சென்னை: பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து, ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். பா.ம.க. தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நிறுவனர் ராமதாசை தலைவராகவும் அவர் நியமித்த நிர்வாகிகளையும் அங்கீகரிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

உள்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை, பா.ம.க. சின்னமான மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உள் கட்சி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது என்பதால், உரிமைகள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளலாம் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாம்பழம் சின்னம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் 2 நாளுக்குள் மனுதாக்கல் செய்ய ராமதாஸ் தரப்புக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்து மூன்று நாட்களுக்குள் உரிமையியல் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மாம்பழம் சின்னம் விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.

முறையீட்டை கேட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.தர்மபிரபு, இது சம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்தால் நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மனு நகலை அன்புமணி தரப்புக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, இன்று பிற்பகல் மனு தாக்கல் செய்ய இருப்பதாக ராமதாஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Ramadoss ,Civil Court ,Chennai ,Ramadoss' ,Chennai Civil Court ,Supreme Court ,PMK ,Election Commission ,Anbumani ,
× RELATED டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த...