- சட்டமன்ற உறுப்பினர்
- அஇஅதிமுக
- முன்னாள் அமைச்சர்
- சிவகங்கை
- AIADMK MLA
- சிவகங்கை மாவட்டம்
- செந்தில்நாதன்
- நாகடி கிராமம்
- தேவகோட்டை
சிவகங்கை: அதிமுக எம்எல்ஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினரே தொகுதி முழுவதும் ஒட்டிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளர் செந்தில்நாதன். இவரது சொந்த ஊர் தேவகோட்டை அருகே உள்ள நாகாடி கிராமம். இவர் 2021 சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னாள் அமைச்சராக இருந்த பாஸ்கரனுக்கு 2021ல் மீண்டும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அதிமுக தலைமை செந்தில்நாதனை வேட்பாளராக அறிவித்தது. இதற்கு பாஸ்கரன் தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து பிரசாரத்தின்போது செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் சொந்த ஊரான தமறாக்கில் கிராம மக்கள் முன்னிலையில் அவரது காலில் விழுந்து ஆதரவை பெற்றார். இந்நிலையில் சிவகங்கை தொகுதிக்கு செந்தில்நாதனே மீண்டும் அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
இதனால் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆதரவாளர்கள் கொதித்து போயுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிவகங்கை தொகுதி அதிமுகவினர் என்ற பெயரில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ‘என் தொகுதி.. என் உரிமை… சிவகங்கை தொகுதியில் பிறந்த ஒருவருக்கே அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
சிவகங்கை தொகுதியில் பிறந்த ஒருவருக்கு கூட சிவகங்கையில் போட்டியிட தகுதி இல்லையா? சிவகங்கை தொகுதியை சேர்ந்த யாராவது நாங்கள் தேவகோட்டையில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? புரட்சி தலைவி அம்மா உயிரோடு இருந்து இருந்தால் இவ்வாறு நடக்குமா? சிந்திப்பீர்..
சிவகங்கை சட்டமன்ற தொகுதி அதிமுகவினரே சிந்திப்பீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்கள் வைரலாக பரவி வருகிறது. இதனால் செந்தில்நாதன் தரப்பினர் நொந்து போயுள்ளனர். ‘கடந்த முறையே இவர்களை சரிகட்டி தேர்தலில் வெற்றி பெற்றது பெரும்பாடாகிவிட்டது. இந்த முறை மீண்டும் ஆரம்பித்துவிட்டார்களே. என்ன செய்வது?’ என்று கையை பிசகி கொண்டிருக்கிறார்களாம்.
