காங்கயம் அருகே கொடுமை குழந்தை பெற்ற 2 மணி நேரத்தில் வேலை செய்த பெண் கூலித் தொழிலாளி

காங்கயம், பிப். 17: காங்கயம் அருகே, கீரனூர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தேங்காய் உடைத்து உலர்த்தும் களத்தில் சேலம் பகுதியைச் சேர்ந்த வெற்றி(35) தன் மனைவி கவிதாவுடன்(30) தங்கி, தேங்காய் உடைக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். நிறைமாத கர்ப்பிணியான கவிதாவுக்கு கடந்த 14ம் தேதி காலை தேங்காய் உலர் களத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தேங்காய் கள நிர்வாகிகள் கவிதாவை மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு அனுமதிக்காமல், தொடர்ந்து வேலை செய்யப் பணித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கவிதா குடும்பத்தினர் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பிரசவத்துக்கு அவர்கள்  மருத்துவமனைக்கு செல்லும் பழக்கம் கிடையாது எனவும் கூறப்படுகிறது.

எனினும், குழந்தை பிறந்த இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர், தேங்காய் உடைக்கும் பணியை கவிதா செய்தார். இத்தகவலறிந்த சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முரளி தலைமையிலான மருத்துவர்குழு உள்ளிட்டோர் கவிதா வேலை செய்யும் தேங்காய் களத்திற்குச் சென்று, அவரை மீட்டு முதலுதவி செய்து, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கவிதா ரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிறந்த குழந்தை 2 கிலோ எடை மட்டுமே உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் தங்கி, சிகிச்சை பெற்று வருகின்றனர். கவிதாவுக்கு இது 3வது பிரசவம் என்பது குறிப்பிடதக்கதாகும்.

Related Stories: