கடைகளுக்கு முன்பாக பயணிகள் நிழற்கூடம் ஜவுளி வியாபாரிகள் எதிர்ப்பு

ஈரோடு, பிப். 17: கடைகளுக்கு முன்பாக பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு ஜவுளி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் ஜவுளி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் இங்கு செவ்வாய்கிழமை ஜவுளி சந்தை நடைபெறுகிறது. இது தவிர தினசரி கடைகள் மூலம் வியாபாரம் நடக்கிறது. ஜவுளி சந்தை வளாகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளதால், ஜவுளி சந்தை வளாகத்தில் இடநெருக்கடி நிலவி வருகிறது.

இந்நிலையில், பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு செல்லும் சாலையில், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. வளர்ச்சி நிதியின் கீழ் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகின்ற 22ம் தேதி டெண்டர் விடப்பட உள்ளது. இதனால், ஜவுளி வளாகத்தில் உள்ள சுமார் 70 கடைகளை 24ம் தேதிக்குள் காலி செய்யும்படி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, ஜவுளி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஈரோடு கனி மார்க்கெட் வியாபரிகள் சங்கம் சார்பில் ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவிடம் மனு அளித்தனர்.

Related Stories: