சென்னை: 9 ஆண்டுகளுக்குப் பிறகு டிடிவி தினகரன் அதிமுக அலுவலகம் சென்றுள்ளார். 2017 ஆகஸ்ட்டில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு டிடிவி தினகரன் சென்றதில்லை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சற்றுநேரத்தில் தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தாகிறது. இந்த நிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிடிவி தினகரன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் தலைமை என கூறும் அதிமுக அலுவலகத்தில் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடக்காததால் விமர்சனங்கள் எழுந்தது. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தியது கடும் விமர்சனத்துக்குள்ளானதால் அதிமுக அலுவலகம் வரும்படி பியூஸ் கோயலிடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் சென்றுள்ளார்.
சற்று நேரத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகம் வந்துள்ளனர். பாஜகவுக்கு 29 தொகுதிகளும், பாமகவுக்கு 17 தொகுதிகளும், அமமுகவுக்கு 10-12 தொகுதிகளும், தமாகாவுக்கு 2-3 தொகுதிகளும் ஒதுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
2017ம் ஆண்டு அதிமுக துணைப் பொதுச் செயலாளராக எம்.ஜி.ஆர். மாளிகைக்கு சென்ற டிடிவி தினகரன் தற்போது அமமுக பொதுச்செயலாளராக வருகை தந்துள்ளார்.
