பெங்களூர், மும்பையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.14 லட்சம் மதிப்பு தங்கம், 28 கிலோ கஞ்சா பறிமுதல்: ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி

தண்டையார்பேட்டை: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, வெளிமாநிலத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் ரயில்கள், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளிமாநிலத்திற்கு செல்லும் ரயில்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனை நடத்தி உரிய ஆவணமின்றி கொண்டுவரப்படும் பணம், பரிசு பொருள், போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

அதனடிப்படையில் நேற்று பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகப்படும்படி ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணமின்றி 13 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 94 கிராம் தங்கம், 4 லட்சத்து 98 ஆயிரத்து 400 ரூபாய் இருந்தது என்பதும், இந்த பணத்தை எடுத்து வந்தது தணிகைவேல் (57) என்பதும் தெரியவந்தது. இவரிடம் இருந்து தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதுபோல் மும்பையில் இருந்து சென்ட்ரலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூரில் நின்றபோது, அதிலிருந்து இறங்கி சென்றவரை பிடித்து விசாரணை செய்தபோது, நந்தகுமார் (29) என்பதும், உரிய ஆவணமின்றி 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுபோல் புருலியாடு பகுதியில் இருந்து திருநெல்வேலி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருவொற்றியூர்-எண்ணூர் இடையே முன்பதிவு இல்லா பெட்டியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கேட்பாரற்று கிடந்த 10 பண்டலை எடுத்து சோதனை செய்தபோது, 12 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதுபோல் அரக்கோணம் செல்லும் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்க நகைகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கஞ்சா, போதை தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா வைத்திருந்தது யார்? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதுபோல் தொடர்ந்து ரயில்களில் சோதனை நடத்தப்பட்டு உரிய ஆவணமின்றி கொண்டுவரும் பரிசு பொருட்கள், பணம், போதைப பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரி வித்துள்ளனர்.

Related Stories: