சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில், பட்டி பேரவை தொகுதியை சேர்ந்த லால்ஜித் சிங் புல்லர் போக்குவரத்து மற்றும் சிறைத்துறை அமைச்ராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அமிர்தசரசில் உள்ள அரசு கிடங்கு நிறுவன மேலாளர் ககன்தீப் சிங் ரந்தாவா நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ககன்தீப் சிங் ரந்தவா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் காணொலி ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “ரூ.10 லட்சத்தை லஞ்சமாக வாங்கி கொண்டு, அமைச்சர் லால்ஜித் சிங் புல்லரின் உதவியாளருக்கு சாதகமாக அரசு கிடங்கு டென்டரை வழங்குமாறு நான் மிரட்டப்பட்டேன். ஆனால், சட்டப்படி அரசு கிடங்கு டென்டரை வேறொருவருக்கு வழங்கியதால் என்னை அமைச்சரின் இடத்துக்கு அழைத்து தாக்கினார்கள். இதனால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்” என ரந்தவா குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து லால்ஜித் சிங் புல்லரை பதவி விலகுமாறு முதல்வர் பகவந்த் சிங் மான் உத்தரவிட்டார். இதையடுத்து லால்ஜித் சிங் புல்லர் அமைச்சர் பதவியில் இருந்து நேற்று விலகினார். இதுகுறித்து புல்லர் தன் முகநூல் பதிவில், “என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது. இருப்பினும், எங்கள் கட்சி உண்மையின் பக்கம் நிற்கிறது. இந்த விவகாரத்தில் விசாரணை முடியும் வரை நான் பதவியில் இருந்து விலகுகிறேன். என் பதவி விலகலை கட்சியும், முதல்வரும் ஏற்று கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து லால்ஜித் சிங் புல்லரின் விலகலை முதல்வர பகவந்த் சிங் மான் ஏற்று கொண்டார்.
