புதுடெல்லி: சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் சூழலில், வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டரை 20% உயர்த்தப்பட்டுள்ளது. மத்தியகிழக்கில் நீடிக்கும் போர் காரணமாக வீடுகளுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விலையும் அதிகரித்துள்ளது. மேலும், பல இடங்களில் ஹோட்டல்கள், நிறுவன கேண்டீன்கள் உள்ளிட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 20 சதவீத வணிக எல்பிஜி ஒதுக்கீட்டுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் நீரஜ் மிட்டல், அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில், “வணிக ரீதியான எல்பிஜிக்கு ஏற்கனவே 30 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், வரும் மார்ச் 23(நாளை) முதல் கூடுதலாக 20 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் 20 சதவீத எரிவாயு ஒதுக்கீட்டில், ஹோட்டல்கள், தாபாக்கள், தொழிற்சாலை கேண்டீன்கள், உணவு பதப்படுத்துதல், பால் பண்ணைகள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் இயக்கப்படும் மானிய விலை உணவகங்கள், சமூக சமையல்கூடங்கள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோர் அனைவரும் எண்ணெய் நிறுவனங்களிடம் முன்பதிவு செய்திருக்க வேண்டும். வரும்நாள்களில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புக்கு மாறுவதற்கு தயாராக உள்ளவர்கள் மற்றும் அதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே இந்த 50 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் எரிவாயு வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
